அதிக சம்பளம் வாங்கிய ஊழியருக்கு நடந்த விபரீதம்

itபெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கடந்த எட்டு வருடங்களாக வேலை செய்துவந்த 32 வயது வாலிபர் ஒருவர் 40,000 ரூ சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

தனக்கு நிறுவனம் அதிக சம்பளம் வழங்குவதாக இவரது மனதில் ஒரு எண்ணம் தோன்றவே தான் வாங்கிய மாத சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு வேலையிலிருந்தும் விலகியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஐ.டி ஊழியர்களின் வேலைப்பளு அவர்களுக்கு எந்த அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. பொதுவாக இதுபோல் எட்டு வருட அனுபவம் கொண்டவர்கள் எளிதாக 60,000 சம்பளம் பெறமுடியும் என்று அத்துறையின் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஆயினும், தனது வேலையைவிட அதிகமாக சம்பளம் பெறுவது என்ற குற்ற உணர்ச்சிக்கு இந்த ஊழியர் ஆளாகியுள்ளது குழப்பமான சிந்தனையால் ஏற்படும் ஒருவித மனநோய் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் சில தனி நபர்களை இந்த நிலைக்குத் தூண்டுவதாக மூத்த மனோசிகிச்சையாளரான டாக்டர் குல்கர்னி கூறுகின்றார்.

வரம்பற்ற இலட்சியங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட திறன்களின் இடையே ஏற்படும் தகராறே இந்த நிலைக்குக் காரணமாகின்றது. மனித மூளையில் ஏற்படும் சில உயிர்வேதியல் மாற்றங்கள் கூட இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்கலாம். தான் செய்யும் ஒரு சிறிய தவறைக்கூட மன்னிக்கமுடியாத குற்றமாக எண்ணிக்கொண்டு தான் தண்டிக்கப்படவேண்டும் என்ற குற்ற உணர்ச்சியில் இவர்கள் இதுபோல் நடந்து கொள்வார்கள் என்று குல்கர்னி தெரிவித்தார்.

வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் ஒருவர் தன்னைவிடத் திறமையானவர்கள் உத்தியோக உயர்வினைப் பெறாதபோது தனக்கும் அத்தகைய உயர்வு கிட்டக்கூடாது என்ற மனநிலையுடன் தன்னிடம் சிகிச்சை பெற வந்ததையும் அவர் ஆதாரமாகக் காண்பிக்கின்றார். மன அழுத்தத்திற்கான மருந்துகள் மட்டுமின்றி அறிவாற்றல் நடத்தை சிகிச்சைகளும் இவர்களுக்குத் தரப்படுவதாகத் மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

TAGS: