திருப்பூர்: கொங்கு மண்ணின் பெருமையாக விளங்கும் காங்கயம் காளைகள் இனம், அழிவின் விளிம்பில் உள்ளது. தமிழர்களின் உழவுத் தொழிலுக்கு, மாடுகளே உறுதுணை.
தமிழகத்தில், மதுரை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் “புலியகுளம் இனம்’ மாடுகளும், தஞ்சாவூர் பகுதிகளில் ஒம்பளச்சேரியும், சேலம் பகுதியில் பர்கூர் இன மாடுகளும், தேனி பகுதிகளில் மலை மாடும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆலம்பாடியும், கொங்கு மண்டலத்தில் காங்கயம் காளைகளும் புகழ்பெற்றவை.
இந்த மாடுகளில், தலை சிறந்தது காங்கயம் இன மாடுகள் என, கூறப்படுகிறது. வேலைக்காவும், பாலுக்காவும் என, இரண்டுக்கும் இவை பயன்படும். கம்பீரம், அழகு, மிகச்சிறந்த சக்தி மற்றும் அறிவை கொண்டது. விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து, பாலுக்காக மட்டுமே மாடுகள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், ஆலம்பாடி என்ற மாடு இனம் அழிந்தே போனது. இதே போன்று, பாரம்பரியம் மிக்க பிற இன மாடுகளும் அழிந்து வருகின்றன. இதற்கு, காங்கயம் காளைகளும் விதிவிலக்கல்ல.
கடந்த 1990களில், 11 லட்சம் காங்கயம் மாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை, கடந்த 2000ம் ஆண்டுகளில் 4.74 லட்சமாக குறைந்தது, 2010ல், 2 லட்சமாக வீழ்ச்சியடைந்தது.
இதுகுறித்து, சேனாதிபதி காங்கயம் காளைகள் ஆராய்ச்சி நிலைய தலைவர் கார்த்திகேயா கூறியதாவது: காங்கயம் இன மாடுகளை காக்க வேண்டியது குறித்து, ஐ.நா., சபையின் பல்லுயிர் பாதுகாப்பு சங்கம் விளக்கியுள்ளது.
இந்திய மாடுகளில் மட்டுமே திமில், கொம்புகள் இருக்கும். அதில், கொங்கு மண்டலத்தின் பெருமையாகவும், அழகு , கம்பீரம் மிகுந்த காங்கயம் காளைகள், தற்போது அழிந்து வருகின்றன. மண்ணின் மரபு சார்ந்த இம்மாடுகளை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆராய்ச்சி நிலையம் மூலம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காங்கயம் காளைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையில் உதவிகளும் வழங்க வேண்டும். பால் உற்பத்திக்கு என வந்துள்ள மாடுகள் குறித்தும், அவற்றின் பால் தரம் குறித்தும் ஆய்வு செய்தாலே, காங்கயம் இன மாடுகளை காக்க அரசு முன் வரும்.
ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை தேவையற்றவை என நகரங்களில் வசிப்பவர்களில் சிலர் கூறி வருகின்றனர். மாடுகளுடன் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும். உடன் வாழும் சகோதர இனத்துடன் விளையாடும் விளையாட்டு அது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.