காமன்வெல்த் மாநாடு: சமாதானம் செய்த சிதம்பரம்; பிடி கொடுக்காத கருணாநிதி

pcகாமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சனிக்கிழமை ஈடுபட்டார்.

ஆனால் கருணாநிதி, தன் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை என்றும் சிதம்பரத்தின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துவிட்டதாகச் செய்திகள் வந்தன.

இதற்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

“காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் துரும்பு கூட பங்கேற்கக் கூடாது. அப்படி பங்கேற்றால் அதன் விளைவுகளைக் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று கருணாநிதி கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சனிக்கிழமை கருணாநிதியைச் சிதம்பரம் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதை காங்கிரஸ் கட்சி மறுக்கவில்லை.

அதன் காரணமாகத்தான் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தன.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க காங்கிரஸின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை.

இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இசைப்பிரியாவைக் கொடூரமாகக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து, தண்டிக்கும் பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு என்றார் அவர்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் கட்சி (ப.சிதம்பரம் கூற்றின்படி) சற்று வெளிப்படையாகத் தற்போதுதான் கூறியுள்ளது.

இது காங்கிரஸ் கட்சி விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கருணாநிதி கூறியதன் விளைவாலேயே ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

கருணாநிதியுடனான சந்திப்பில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காமல் தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த யாராவது ஒருவர் பங்கேற்க வேண்டியது அவசியமாகிறது. காமன்வெல்த் அமைப்பில் இந்தியாதான் பிரதானம். சர்வதேச நல்லுறவை பேணுவதற்கு அந்த மாநாட்டில் பங்கேற்பது அவசியம் என்று சிதம்பரம் காரணங்களை வரிசைப்படுத்தி திமுக தலைவர் கருணாநிதியைச் சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு கருணாநிதி பிடி கொடுக்கவில்லையாம். “இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் கருத்துருவை ஏற்படுத்த வேண்டியது இந்தியாவின் கடமை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவைச் சார்ந்த யாரும் பங்கேற்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவது சரியாக இருக்காது’ என்று கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தாராம்.

மேலும் இந்தச் சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் சிதம்பரம் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அண்மைக் காலமாக காங்கிரஸ் – பாஜக இரண்டையும் சம அளவில் வைத்தே கருணாநிதி பேசி வருகிறார்.

இது காங்கிரஸýக்குச் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டால், நாங்கள் காங்கிரஸின் கையை விட்டு விடுவோம் என்று திருமாவளவனின் பொன்விழா கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.

தேமுதிகவும் காங்கிரஸக்குப் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது.

அதனால் காங்கிரஸின் கையைத் திமுக விட்டால், அந்தக் கட்சி தமிழகத்தில் தனிமைப்பட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது.

எனவே, மீண்டும் திமுகவுடன் கூட்டணியைப் புதுப்பிக்க காங்கிரஸ் விரும்புகிறது.

ஆனால் கூட்டணி தொடர்பாகவும் கருணாநிதி தெளிவான பதிலைச் சிதம்பரத்திடம் தெரிவிக்கவில்லையாம்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காமல், வேறு யாராவது பங்கேற்றாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெசோ சார்பில் போராட்டம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக முடிவு எடுக்க விரைவில் டெசோ கூட்டம் கூட்டப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TAGS: