தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா?

nakkheerannakkeerangopalஇந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒட்டி இந்தியாவில் பல்வேறு கருத்தறியும் அமைப்புகளால் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமீபத்தில் கேட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த யோசனைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.

“காங்கிரஸுக்கு தேர்தல் ஜுரம்”

காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து , 1998ல் கருத்துக்கணிப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்ததற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற்றவர்களில் ஒருவரான, நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.கோபால் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு அதைப் பீடித்திருக்கும் “ தேர்தல் ஜுரத்தை” காட்டுகிறது என்றார்.

2004 மற்றும் 2009ம் ஆண்டுகளிலும் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்புகள் வந்தன. அந்தக் கணிப்புகளில் பல, பாஜக வெற்றி பெறும் என்று கூறின. அதையும் மீறி, காங்கிரஸ் அந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. எனவே அந்த தேர்தல்களின் போது இந்தக் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸ் கட்சி இப்போது கவலைப்படுவதற்கு காரணம், தேர்தல் முடிவு குறித்து அது கொண்டிருக்கும் “தன் பயம்”தான் என்றார் கோபால்.

மேலும், நரேந்திர மோடியின் வெற்றி குறித்து ஊடகங்கள் “ ஊதிப் பெரிதாக்குகின்றன”, அதைக் கண்டும் காங்கிரஸ் பயப்படுகிறது என்றார் அவர்.

‘ கருத்துக்கணிப்புகளால் வாக்குகள் மாறாது’

ஆனால் தேர்தல் கருத்துக்கணிப்புகளால், வாக்காளர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தான் நம்பவில்லை என்று கூறினார் கோபால்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் விஞ்ஞான ரீதியானவை அல்ல, இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த, பல்லின மக்கள் வாழும் நாட்டில், வெறும் 3,000 அல்லது 6,000 பேரிடம் கருத்துக்கேட்டுவிட்டு, அதை பொதுப்படையான கருத்தாக சொல்ல முடியாது என்று வைக்கப்படும் விமர்சனம் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த கோபால், இந்த கருத்துடன் தனக்கு உடன்பாடில்லை, ஏனென்றால், கருத்துக் கணிப்பு நடத்துபவர்கள், 120 கோடி பேரிடமும் கருத்து கேட்கமுடியாது என்றார்.

ஆனால் எந்த மாதிரியான சாம்பிள்கள் ( மாதிரி வாக்காளர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை வெளிப்படையாக கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் சொல்லவேண்டும், அவை அதனை முறையாகத்தான் சொல்லுகின்றன என்றார் அவர். -BBC

TAGS: