இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்க மேலும் 2 அமைச்சர்கள் எதிர்ப்பு

jnatanarayaஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மேலும் 2 மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது அந்நாட்டு ராணுவம் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் கொடுமைகள் இழைக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.

இதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமியும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனும் இதே கருத்தைத் தற்போது வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து நாராயணசாமி, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், “”பிரதமர் இலங்கைக்குச் செல்லக் கூடாது என்ற என் கருத்தை அவரிடம் தெரிவித்துள்ளேன்.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதை தமிழ்நாடு காங்கிரûஸச் சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்களும் எம்.பி.க்களும் விரும்பவில்லை.

சில அமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். சிலர் அவரைச் சந்திக்கவில்லை. ஆனாலும் அவர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது” என்றார்.

ஜெயந்தி நடராஜன், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று அவருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

எனினும், தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவரும் மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்.

“”இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக, பிரதமர் அந்நாட்டுக்குச் செல்ல வேண்டும். கொழும்பு சென்றடைவதற்கு முன்பாக, யாழ்ப்பாணத்துக்கும், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மற்ற பகுதிகளுக்கும் பிரதமர் செல்ல வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கோரிக்கையாகவும் இது இருக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உள்ள சில அதிகாரிகளும் பிரதமர் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்றே கருதுகின்றனர்.

சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்துப் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரதமர் அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

“உண்மை நிலை தெரியாமல் கருத்து வெளியிட வேண்டாம்’

இலங்கை நிலவரம் தொடர்பாக கருத்து வெளியிடும் தமிழகத் தலைவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடாமல் கருத்து வெளியிடுவதாக தில்லியில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், “காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. அக்கட்சிகளின் தலைவர்கள், வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்தால் அதை இலங்கை அரசு வரவேற்கும். ஆனால், நேரில் நிலைமையை   ஆராயாமல் சில பிரிவினை சக்திகளின் போராட்டங்களுக்கு அடிபணிந்து கருத்து வெளியிடுவது துரதிருஷ்டவசமானது’ என்று தெரிவித்தன.

TAGS: