பலாத்கார வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 400 ஆசிரமங்களை நடத்தி வரும் ஆன்மீக தலைவர் அசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அசாராம் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி பலாத்காரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த பொலிசார் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின்கீழ் அசாராம் பாபு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்.
பொலிசார் தாக்கல் செய்துள்ள 1300 பக்க குற்றப்பத்திரிகையில், அசாராம் பாபு மற்றும் அவரது உதவியாளர்கள் மீது சதித்திட்ட குற்றச்சாட்டும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அசாராம் பாபுவுக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் 140 சாட்சிகளின் வாக்குமூலங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து ஆசாராம் பாபுவின் நீதிமன்றக் காவல் நவம்பர் 16ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.