தஞ்சாவூர், நவ. 7- உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஆறாத ரணமாக இன்றும் வலித்துக் கொண்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் படுகொலை. துடிக்கத் துடிக்க தமிழர்களை கொன்று குவித்த கோரத் தாண்டவம், உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் சொந்த மக்களையே சூறையாடி இனஅழிப்பை அரங்கேற்றிய கொடுமை, இலங்கையைத் தவிர எந்த நாட்டிலும் இல்லை.
இலங்கை இனவாத அரசின் கோரப் பிடியில் சிக்கி இன்னுயிரை நீத்த ஈழத்து தமிழ் மக்களின் தியாகத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. அவர்களின் தியாகத்தை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையிலும், ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நினைவூட்டும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இப்போது திறக்கப்பட்டிருக்கிறது.
தீவிரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டோம்… தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்று கூறி சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தி வருகிறது இலங்கை அரசு. இதன்மூலம் உலக நாடுகளின் வாயை அடைத்துவிடலாம் என்றும் எக்காளமிட்டு வருகிறது.
ஆனால், போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது முள்ளிவாய்க்கால் முற்றம். பல்வேறு தடைகளைக் கடந்து, எளிமையான திறப்பு விழா கண்ட இந்த முற்றத்தில் தமிழர்களின் ரத்த சரித்திரம் பிரதிபலிப்பதை காண முடிகிறது.
உலகத் தமிழர்கள் உதவியுடன் உலகத் தமிழர் பேரமைப்பு உருவாக்கியிருக்கும் இந்த முற்றம், இலங்கையில் வதைபட்ட நம் தொப்புள் கொடி உறவுகளின் நினைவுச் சின்னம் மட்டும் அல்ல. இலங்கை அரசைக் கண்டித்து தீக்குளித்து உயிர்விட்ட முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேரின் நினைவுச் சின்னமாகவும் விளங்குகிறது. அவர்களின் சிற்பங்களும் இங்கே வடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை கொலைக்களத்தில் சிதறிக்கிடக்கும் உடல்கள்… முள்வேலி முகாமில் அடைபட்டிருக்கும் தமிழர்கள்… கைகள் கட்டப்பட்டு துடிக்கத் துடிக்க கொலை செய்யும் காட்சிகள்… சித்ரவதைக்கு ஆளாகும் பெண்கள்…. கொத்துக்குண்டுகள் வீச்சு… வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட வீரத்தமிழர்கள்… என முற்றம் விரிகிறது.
இந்த முற்றம் யாருக்கும் எதிரானது அல்ல; தமிழர்களின் ஒப்பற்ற கலைக்கோவில் என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் கூறியிருக்கிறார்.
எனவே, வரலாற்று பதிவுகளை தாங்கி கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நினைவு முற்றத்தை, அரசியல் நோக்கங்களுடன் ஆராயாமல் பராமரித்து பாதுகாக்கவேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோள்.
முள்ளிவாய்க்கால் கொடூரத்தை அரங்கேற்றிய மண்ணில், காமன்வெல்த் மாநாடு நடப்பது அந்த நாட்டின் செயலை அங்கீகரிப்பது போன்றது என்று தமிழகம் முழுவதும் எதிர்ப்பலை எழுந்தபோதிலும், மாநாடு நடப்பது உறுதியாகி விட்டது. எனவே, நடந்து முடிந்ததை பேசுவதை விட்டுவிட்டு, நடக்கப்போவதை மட்டும் பேச வேண்டியது அவசியம். இலங்கை அரசின் மனித உரிமை மீறலை தோலுரித்துக் காட்ட, காமன்வெல்த் மாநாட்டை ஒரு களமாக உலகத் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.