இலங்கை காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்பது குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று முடிவு

manmohan_singhபுதுடெல்லி, நவ.7- இலங்கையில் இந்த மாதம் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் ஓரணியில் நின்று குரல் கொடுத்து வருகின்றன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், மற்றும் நாராயணசாமி ஆகியோரும் இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஜி.கே.வாசன் பிரதமரை நேரில் இரண்டு முறை சந்தித்து இதனை வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீனிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வந்து பிரதமரை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது குறித்தும், இந்தியா சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்தும் முடிவுகளை எடுக்கும் நிலை இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்த இந்திய அரசின் முடிவு வெகுவிரைவில் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மீம் அப்சலிடம் நேற்று நிருபர்கள், தமிழகத்தை சேர்ந்த மந்திரிகள் பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்று கூறி வருகிறார்களே? என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘அனைவருக்கும் தங்கள் சொந்த கருத்துகளை கூறுவதற்கு உரிமை இருக்கிறது.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் நிலை பற்றி தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தேச நலனை கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்க முடியும். நாட்டின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.

பிரதமர் இலங்கை சென்றால் தமிழகத்தில் காங்கிரசுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அப்சல், ‘‘அங்கு காங்கிரஸ் வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்ற கேள்வியே இல்லை. காங்கிரஸ் எடுக்கும் முடிவு நாட்டின் நலனுக்கு உகந்ததா? என்பது தான் மிகவும் முக்கியம்’’ என்றார்.

இந்த பிரச்சினையில் பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் முடிவே காங்கிரசின் முடிவு என்றும் அப்சல் கூறினார். இலங்கையில் இசைப்பிரியா படுகொலை செய்யப்படும் காட்சிகளை சானல்-4 வெளியிட்ட பின்னர் தமிழ்நாட்டில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருக்கிறது. இதனால் மத்திய அரசு விரைவில் இதில் முடிவு எடுக்க திட்டமிட்டது.

இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ள மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் கலந்து கொள்கிறாரோ இல்லையோ, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

TAGS: