கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததற்கு வெளியுறவு அமைச்சர் மழுப்பலான பதில்

salman-khurshidகொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காததற்கு, இலங்கை தமிழர் பிரச்சினை மட்டும் காரணமல்ல என மழுப்பலாக, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

இலங்கையில்  கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு இம்மாதம் 15ல் தொடங்கி, 17 வரை நடக்கிறது.

இலங்கையில் 2009ல் நடந்த உள்நாட்டு போரின் போது, ஏராளமான அப்பாவி தமிழர்களை, அந்நாட்டு இராணுவம்  கொன்று குவித்ததாகவும், மனித உரிமை மீறல்கள் அரங்கேறியதாகவும் ஏற்கனவே புகார் உள்ளது.

எனவே, இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட யாரும் பங்கேற்க கூடாது என தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின.

இது தொடர்பாக, தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்காக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியாமல் மத்திய அரசும், காங்கிரஸ் மேலிடமும், காலம் தாழ்த்தி வந்தன.

இந்நிலையில், நீண்ட ஆலோசனைக்கு பின் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான, பிரதிநிதிகள் பங்கேற்பர்’ என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவால், இலங்கையுடனான உறவு  நிரந்தரமாக பாதிக்கப்பட்டு விடக் கூடாது என மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இலங்கை அரசை சமாதானப்படுத்தும் விதமாக பிரதமர்  மன்மோகன் சிங் இலங்கை அதிபர், ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனதற்காக, வருத்தப்படுகிறேன் என அவர் எழுதியுள்ளதாக, கூறப்படுகிறது. ஆனாலும் இந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த கடிதம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம், இலங்கை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் பங்கேற்க முடியாததற்கு இலங்கை தமிழர் பிரச்சினை மட்டும் காரணமல்ல, பல பிரச்சினைகள் உள்ளன. சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் பங்கேற்றுள்ளார். மேலும் பல முக்கியமான வேலைகள் அவருக்கு உள்ளன. இதுபோன்ற, பல காரணங்களை மனதில் வைத்து தான் பிரதமர் இலங்கை செல்லவில்லை. இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.

v_narayanaswamiஇந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சருமான, நாராயணசாமி கூறியதாவது:

தமிழர்கள், பெரும்பான்மையாக வசிக்கும், புதுச்சேரியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவன் நான். அங்கு, இலங்கை தமிழர் பிரச்சினை, உணர்வுப்பூர்வமாக உள்ளது.

இலங்கை தமிழர் விஷயத்தில், இலங்கை அரசு, ஏற்கனவே அளித்த, பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலிருந்து, இன்னும் இராணுவம் வாபஸ் பெறப்படவில்லை.

தூதரக ரீதியாக, பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இவ்வாறு, நாராயணசாமி கூறினார்.

TAGS: