இந்தியாவின் பிரிவினைக்கு அனுமதி அளித்து நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியதும், நாட்டுக்காகப் பாடுபட்ட முக்கிய தலைவர்களைப் புறக்கணித்து, நேரு குடும்பத்தினரின் புகழ் பாடி வரலாற்றை மாற்றியதும் காங்கிரஸ்தான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வரலாறு-புவியியலை பாஜக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் கேடா நகரில் சிறுபான்மையினரால் கட்டப்பட்ட மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங், ஹிந்துஸ்தான் மண்ணில் பிறந்தார். (தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கா என்ற கிராமத்தில் 1932ஆம் ஆண்டு, செப்டம்பர் 26ஆம் தேதி அவர் பிறந்தார்). தற்போது அது நம்மிடம் இல்லை.
நம் நாட்டின் புவியியலை மாற்றியது யார்? நாட்டைப் பல துண்டுகளாகப் பிரிக்க யார் காரணம்? இந்தியாவை இரண்டாகப் பிரித்தது காங்கிரஸ் கட்சிதான்.
நம் நாட்டுக்கு சொந்தமான பல 100 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் இந்தப் புவியியல் மாற்றத்துக்கு யார் காரணம்?
மத்திய அரசு, மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய சபர்மதி-தண்டி பாதையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. 6 மாதங்களுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்தப் பாதை 30 கி.மீ. தூரத்திற்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, மகாத்மா காந்தியைக் கைவிட்டுள்ளது. சர்தார் படேலுக்கு 41 ஆண்டுகள் கழித்து, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
சட்ட மேதை அம்பேத்கருக்கு நாடு சுதந்திரம் பெற்று 33 ஆண்டுகள் கழித்து இவ்விருது வழங்கப்பட்டது. ஆனால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும் அவர்களது வாழ்நாளிலேயே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகியோர் காங்கிரசால் மறக்கடிக்கப்பட்ட தலைவர்கள் ஆவர். நவம்பர் 11ஆம் தேதி மிகச் சிறந்த கல்வியாளர் அபுல் கலாம் ஆசாத், சுதந்திரப் போராட்ட வீரர் ஜே.பி.கிருபளானி ஆகியோரின் 125வது பிறந்த தினமாகும். இதை காங்கிரஸ் அரசு கொண்டாடவில்லை என்றார் நரேந்திர மோடி.
மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கருத்து தெரிவிக்கையில், “”ஆளுங்கட்சியின் தலைவர்களை வசைபாடுவது தவிர மோடியிடம் வேறு செயல்திட்டம் ஏதுமில்லை. சில நேரங்களில் பிரதமரையும், சில நேரங்களில் சோனியா காந்தியையும் அவர் இகழ்ந்து பேசுகிறார். யாரையும் திட்ட முடியாவிட்டால் தனது சொந்த மக்களையே திட்டுகிறார்” என்று விமர்சித்தார்.