பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவால்தான் என்பதை நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார்.
கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்று வரும் “சிந்தனை திருவிழா’வின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
“நாங்கள் (காங்கிரஸ்) ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் எங்களுக்கு அவர் (நரேந்திர மோடி) ஒரு சவால்தான் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அவரை ஒதுக்கிவிட முடியாது. அவரை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், நான் ஒரு தனிநபராக அவரை பார்க்கும்போது, அவரது சித்தாந்தம், தத்துவம் மற்றும் பிரசார பேரணிகளில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து கவலைப்படுகிறேன்’ என்றார்.
இதுவரை மோடி ஒரு வெற்றிடமாகத்தான் தெரிகிறார். இதுவரை அவர் எந்த ஒரு பெரிய பிரச்னை குறித்தும் பேசவில்லை. மாறாக தேர்தல் வாக்குறுதிகளை பற்றி மட்டும் பேசி வருகிறார்.
ராகுல்தான் தலைவர்: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ராகுல்தான் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் இருக்க வேண்டும் என கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் விரும்புகின்றனர்.
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இளைய தலைமுறையிடம் ஆட்சியையும், அதிகாரத்தையும் ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.
ஆட்சியில் பங்கேற்று நல்ல நிர்வாகத்தை தருவதற்கு போதுமான அளவு நாட்டில் இளைஞர்களும், இளம்பெண்களும் உள்ளனர்.
ராகுல் காந்தி பல்வேறு பிரசார பேரணிகளில் பங்கேற்று பேசுவருகிறார். நான் அவருக்குக் கூறும் ஆலோசனை என்னவென்றால், முக்கியமான பிரச்னைகளில் அவர் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்பதே.
பிரதமர் பேசுகிறார்: முக்கியமான பிரச்னைகளில் பிரதமர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கருத்து கூறுவது இல்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம்,
“”பிரதமர் பொதுமக்களிடையே பேசுகிறார், பத்திரிகையாளர் கூட்டங்களில் பேசுகிறார், இருப்பினும் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் நிச்சயமாக பேசுகிறார்” என்றார் சிதம்பரம்.
பிரதமர் பேசுகிறார் என்று சொல்லும் போதே தெரிகிறது அவர் எவ்வளவு பேசுகிறார் என்று.