இந்தியா உலக தமிழர்களின் நட்பை இழக்க நேரிடும்: தா. பாண்டியன் எச்சரிக்கை

tha_pandian2பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நட்பை இழக்க நேரிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் எச்சரித்துள்ளார்.

இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும். இலங்கை ராணுவ வெறியர்களால் இசைப்பிரியா பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

இந்த நிலையில், தற்போதும் இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், தொடர்ந்து தமிழினத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசை இந்தியா கண்டிப்பதோடு, இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து பிரதமர் மட்டும் அல்ல, இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தோம்.

கொமன்வெல்த் மாநாட்டிற்கு செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும்போது, இலங்கையுடனான உறவு பாதிக்காமல் இருப்பதற்காகவே மாநாட்டில் கலந்து கொள்வதாக கூறி உள்ளார்.

கனடா இலங்கையில் நடைபெற்றுள்ள கொடுமைகளை கருத்தில் கொண்டு நடுநிலையோடு, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்துள்ளது.

இதே போன்று இந்தியாவும் கொமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டும். இலங்கையில் ஈழத் தமிழர்களின் நிலங்கள், வீடுகள் பறிமுதல் செய்யப்படுவதன் மூலம் இன அழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொமன்வெல்த் அமைப்பின் நோக்கமே மனித உரிமை மீறல்களை கண்டிப்பதும், ஜனநாயக முறையை நிலைநாட்டுவதுமே ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக நிறைவேற்றி உள்ள தீர்மானத்தையும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்காமல் இந்திய அரசு கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தால், இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். போர்க்குற்றங்கள் குறித்து நடுநிலையான, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்பதையும் வலியுறத்த வேண்டும்.

மாறாக, இலங்கை உடனான உறவை பாதுகாப்பதற்காக மட்டுமே கலந்து கொள்வதாக இருந்தால், இந்திய அரசும், இலங்கை அரசுக்கு அடுத்தபடியாக 2-வது நாடாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதுடன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நட்பை இழக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

TAGS: