முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு! எதிர்த்து போராடிய பழ. நெடுமாறன் உட்பட 50 பேர் கைது

p144eதஞ்சாவூர், விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர், விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட பொலிஸார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழக்கு தொடரப்போவதாக பழ.நெடுமாறன் அறிவிப்பு!

தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

இலங்கையில் நடந்த போரின் போது உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

இந்த நினைவு முற்றத்தை அமைப்பதற்காக சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. முறையாக அனுமதி பெற்றே நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

ஆனால், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், தமிழக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது குறித்து மற்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு!

எதிர்த்து போராடிய பழ. நெடுமாறன் உட்பட 50 பேர் கைது

nedumaran11தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டதை எதிர்த்து போராடிய உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டதை கண்டித்து பழ. நெடுமாறன் போராட்டத்தில் ஈடுபட்டார். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூரில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்கா ஆகியவை நெடுஞ்சாலைத் துறை இடத்தில் இருப்பதாகக் கூறி, இன்று புதன்கிழமை காலை இடிக்கப்பட்டது.

அந்த இடத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

பின்னர் பொலிஸார் அந்த இடத்தில் இருந்து அகன்றுவிட்டனர். இதனிடையே, அந்தப் பலகையை ஒரு சிலர் இடித்து அகற்றி, கம்பிகளைப் போட்டுள்ளனர்.

இது குறித்து அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் 50 பேரைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை பொலிஸ் வானில் அழைத்து சென்றனர். அப்போது பழ. நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:–

எனக்கு சிறைவாசம் என்பது புதிதல்ல. இன்று மாலை தோழமை கட்சியினர் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்காக லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரை கொடுக்க தயாராக உள்ளனர்.

தொண்டர்கள் கோபப்பட்டு எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபட கூடாது. நீங்கள் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

TAGS: