லக்னோ : டீ விற்பனையாளர், நாட்டின் பிரதமராக முடியாது என்ற சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்து, அக்கட்சியிலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி சுமத்தி வரும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து, தேர்தல் பிரசார கூட்டங்களில் பெரும் ஆதரவை பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தற்போது சமாஜ்வாடி கட்சி சீண்டிப்பார்த்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹர்டோய் நகரில் நடைபெற்ற சமாஜ்வாடி பொதுக்கூட்டத்தில், கட்சி பொதுசெயலாளர் நரேஷ் அகர்வால் பேசியதாவது, எவ்வாறு ராணுவத்தில், சிப்பாய், தளபதி ஆக முடியாதோ, அதுபோல, டீ விற்பனையாளர் எல்லாம் நாட்டின் பிரதமராக ஆக முடியாது என்று கூறினார். இதற்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆதரவு எழுப்பியபோதிலும், நரேஷின் இந்த கருத்து, கட்சி தலைமையிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் பார்லிமென்ட் எம்.பி.க்கள் கூறியிருப்பதாவது, நரேஷின் கருத்து ஏற்புடையதல்ல என்றும், நாட்டின் பிரஜைகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உயர் பதவிகளுக்கு வர உரிமை உண்டு இதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர்கள் கூறினர்.
டீ விற்பனையாளராக தனது வாழ்க்கையை துவக்கிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தற்போது, அவர்சார்ந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு அவரது கடின உழைப்பே காரணம். கடின உழைப்பை மேற்கொண்டால், யாரும் நாட்டின் உயர்நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்பதற்கு நரேந்திர மோடி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். இதனை மற்றவர்களும் பின்பற்றினால், நாட்டிற்கு நலன் பயக்கும் என்று பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் ஷிவானந்த் திவாரி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.