ஜந்தாவது கட்டமாக எடுக்கப்பட்ட முயற்சியில் செவ்வாய் கிரகத்தை நெருங்க தயாராகி விட்டது மங்கல்யான் விண்கலம்.
செவ்வாயில் மனிதன் வசிக்க கூடிய அறிவியல் பூர்வமான சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.
சீனா கடந்த 2012 ல் செயற்கைகோளை அனுப்பியது. ஆனால் விண்வட்டப்பாதையை தாண்டி அது செல்லவில்லை. இந் நிலையில் அதே ஆண்டில் செவ்வாய்க்கு ஆளில்லா விண்கலம் அனுப்பி ஆராய இந்திய விண்வெளி ஆய்வு கழகம் முடிவு செய்தது.
பிரதமர் மன்மோகன் பச்சைக்கொடி காட்டினார். 450 கோடி ரூபாயில் விண்கலம் மங்கல்யான் தயார் செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இதை பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் விண்வெளி வட்டத்தில் கடந்த 5 ம் திகதி செலுத்தியது.
திட்டமிட்டபடி அங்கிருந்து செவ்வாய் நீள்வட்டப்பாதைக்கு அனுப்பி வைக்க தரை கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து முயற்சி மேற்கொண்டனர்.
விண்வெளி வட்டப்பாதையில் ஐந்து கட்டமாக விண்கலத்தை உயர்த்த முடிவு செய்து அதன் இன்ஜின் மோட்டார் அவ்வப்போது வேகப்படுத்தப்பட்டு, விண்கலத்தை 50 ஆயிரம் கிமீ , ஒரு லட்சம் கிமீ என்று உயர்த்தி நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்த நேற்று ஐந்தாவது கட்டமாக விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.
இந்த கடைசி கட்ட முயற்சியிலும் வெற்றி பெற்று, இப்போது ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிமீ உயரத்தில் நீள் வட்டப்பாதையில் மங்கல்யான் அட்டகாசமாக அதிவேகத்தில் சுற்றி வருகிறது.
இதே வேகத்தில் செவ்வாயை அது நெருங்கி வருகிறது. வரும் 1 ம் திகதி திட்டமிட்டபடி, விஞ்ஞானிகள் அடுத்த கட்டமாக செவ்வாய் நீள்வட்டப்பாதையில் செலுத்த முயற்சியை மேற்கொள்வர்.
அடுத்த கட்டமாக அடுத்த ஆண்டு செப்டம்பரில் விண்கலம் செவ்வாய் வட்டப்பாதையில் நுழைந்து தன் ஆய்வை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.