‘கிராமங்களை ஒளிரச் செய்வேன்’ – சச்சின் டெண்டுல்கர்

sachin_tendulkarகிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் மின்சாரம் இல்லாத இந்தியக் கிராமங்களை ஒளிர வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று பிபிசிக்கு வழங்கிய ஒரு சிறப்புப் பேட்டியிலேயே தமது இந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை என்றும், இதன் காரணமாக சிறார்களின் படிப்பு பாதிப்படைகிறது எனவும் அந்தப் பேட்டியில் அவர் கூறினார்.

விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது மனதுக்கு மிகவும் நெருங்கிய விஷயங்களை தான் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் சூரிய சக்தியின் உதவியுடன் மின்சாரம் இல்லாத சில கிராமங்களுக்கு உதவும் திட்டமும் அடங்கும் எனவும் சச்சின் டெண்டுல்கர் மேலும் தெரிவித்தார்.

“பள்ளிக்கூடங்கள் அமைக்கவும் திட்டம்”

இந்த நிலமை மாற வேண்டும் என்கிறார் சச்சின்

இந்தியா முழுவதையும் ஒளிர வைக்க வேண்டும் என்று தனக்கு ஒரு ஆவல் உள்ளது என்றும், அந்த வகையில் சில முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சூரிய சக்தியின் மூலம் சில கிராமங்களை ஒளிரச் செய்தவுடன் அங்கு பள்ளிக்கூடங்களை அமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதால் இரவு நேரங்களில் சமைக்கும் பெண்கள் உணவில் என்ன விழுகிறது என்பதைக் கூட அறிய முடியாமல் உள்ளனர் எனவும் அவர் அந்தப் பேட்டியின் போது சுட்டிக்காட்டினார்.

தனது அம்மாவுக்காகவே தான் விளையாடும் கடைசி போட்டியை மும்பையில் நடத்தும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தான் கேட்டு கடிதம் எழுதியதாகக் கூறும் அவர், கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்தும் ஆழ்ந்த கவலையை அந்தப் பேட்டியில் வெளியிட்டார். -BBC

TAGS: