வீரப்பன் கூட்டாளிகள் மரண தண்டனை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு விசாரணை தொடக்கம்

veerappanசந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறுகின்ற இந்த வழக்கின் விசாரணையின் போது இவர்கள் சார்பில் வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, இது மிகவும் அரிதான வழக்கு என்றும், இதுவரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட எவருக்கும் இந்திய உச்சநீதிமன்றம் அதை தூக்கு தண்டனையாக உயர்த்தியது இல்லை என்றும், இவர்களது வழக்கில் மட்டுமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற வாதத்தின் போது இந்த நால்வரும் 20 ஆண்டு காலத்திற்கு சிறையில் தண்டனையை அனுபவித்து வருவதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இவர்களது தண்டனையை குறைக்கக் கோரியும் ராம்ஜெத்மலானி வாதாடினார்.

மேலும் இந்த வழக்கில் சந்தன கடத்தல் வீரப்பனே முக்கிய குற்றவாளி என்றும், இவர்கள் வீரப்பனின் ஏவலினால் செயல்பட்டவர்கள் என்பதால் இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது மிகவும் அதிகம் என்றார்.

இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் வாதங்களை அடுத்து, இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை நாளையும் தொடரவுள்ளது.

முன்னதாக காவல்துறையினர் மீதான வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் 1993-ம் வருடம் கைதாகி 2004ல் மைசூர் தடா நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்ற வீரப்பனின் நான்கு கூட்டாளிகள் ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோரின் வழக்கை விசாரித்த இந்திய உச்சநீதிமன்றம் , இந்த நால்வருக்கும் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஏற்கனவே தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்தக்கது.

இதற்கு பிறகு 2004-ம் ஆண்டில் இவர்களது சார்பில் கருணை மனு அனுப்பப்பட்டும், 9 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் இந்த மனுவை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். அதனால் எந்த நேரத்திலும் இவர்களது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற தகவல் பரவியதால், இவர்களது தூக்குத்தண்டனையை நிறைவேற்றக் கூடாது என தமிழ் ஆர்வலர் அமைப்புகள் பல ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தன. -BBC

TAGS: