சுதந்திரத்தின்போது நாட்டைப் பிரித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சி மீது, காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை கிடையாது. நாட்டின் தலைவிதியை மாற்ற வேண்டுமென்ற ஆர்வமும் அக்கட்சிக்கு இல்லை. வாக்கு வங்கி அரசியலில் அக்கட்சி ஈடுபடுகிறது. கட்டுக்கதைகளை ஜோடித்து, அதில் பிறரை சிக்க வைப்பது குறித்து எப்போதும் அக்கட்சி பயிற்சி எடுத்து வருகிறது. அதனால்தான் 25 சதவித மக்களுக்கு ஆதரவாகவும், 75 சதவித மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. பிரித்தாள்வதே காங்கிரஸ் கட்சியின் இயல்பாகும்.
சுதந்திரத்தின்போது நாட்டை பிரித்தது காங்கிரஸ் கட்சிதான். தேசிய பாடலான வந்தே மாதரத்தை இசைப்பதிலும் பிளவை ஏற்படுத்தி விட்டது. காஷ்மீருக்கு தனியாக சட்டம் வைத்துக் கொள்ள அனுமதித்து இருக்கிறது. நீர்ப் பிரச்னை, மொழிப் பிரச்னை ஆகியவற்றின் மூலம் நாட்டு மக்களை வடக்கு- தெற்கு, கிராமம்- நகரம் என்று பிரித்து விட்டது.
கரையான் பூச்சி போன்றது: காங்கிரஸ் கட்சியிடம் இருந்து, வாக்கு வங்கி அரசியலை சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கற்றுக் கொண்டு, தனக்கேற்றபடி அதற்கு சாயம் பூசிக் கொண்டு செயல்படுகின்றன. இதுபோன்ற வாக்கு வங்கி அரசியலால், நாட்டுக்கு கெடுதலே ஏற்படும். தற்போது நாட்டுக்கு தேவைப்படுவது, வளர்ச்சிக்கான பாதைதான். நாடு மற்றும் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியலிலேயே பாஜக ஈடுபட்டு வருகிறது. வாக்கு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சி என்ற பெயரிலேயே பாஜக அரசியல் செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி, கர்வம் பிடித்த கட்சியாகும். அக்கட்சிக்கு நாடு மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை கிடையாது. மக்கள் அனைவரும் தனது சட்டைப் பையில் இருப்பதாக அக்கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது.
தனது நலனை மட்டும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி, கரையான் பூச்சி போன்று நாட்டை அரிக்கிறது.
சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடம் இருந்து நாடு விடுதலை பெற மக்கள் பாடுபட வேண்டும். பாஜகவுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு தாருங்கள். நாட்டை புதிய உச்சத்திற்கு பாஜக கொண்டு செல்லும் என்றார் நரேந்திர மோடி.