சரக்குகளை ஏற்றுமதி செய்யும் வகையில் மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று வைகோ பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,
’’தென் தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மையமாக திகழ்கிற மதுரை மாநகரம், வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
கல்வியிற் சிறந்த மதுரை அண்மைக்காலத்தில் ஒரு தொழில் நகரமாகவும் வளர்ந்து வருகின்றது. அதனை ஒட்டி அமைந்து உள்ள தென் மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக வாகன உதிரி பாகங்கள், ரப்பர், வேதிப்பொருள் தொழிற்சாலைகள், கிரானைட் போன்ற தொழில்கள் வளர்ந்து வருகின்றன.
மாதந்தோறும் பத்து டன் அளவில் ஆயத்த ஆடைகள், துணிகள் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், ஐந்து டன் எடையுள்ள காய்கறிகள், பழங்கள் வளைகுடா நாடுகளுக்கும், புகழ்பெற்ற மதுரை மல்லிகைப்பூ மத்திய கிழக்கு, ஐரோப்பா, கனடா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வாகன உதிரி பாகங்களும், உணவு பொருட்களும் மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. இவை அனைத்தும் தொலைவில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன.
மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் மதுரை விமான நிலையத்தில் வழியாகவே ஏற்றுமதி செய்யப்படுமானால் போக்குவரத்து செலவு குறையும். கால விரயம் தவிர்க்கப்படும், ஒட்டு மொத்தமாக உற்பத்தி செலவு குறையும்.
2013–ம் ஆண்டு, மே 28–ம் நாள் வெளியான அரசு அறிவிக்கையின்படி, மதுரை விமான நிலையம், சுங்கவரி விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆயினும் அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும், இன்று வரையிலும் செய்து தரப்படவில்லை. எனவே ஏற்றுமதி சரக்குகளை கையாள முடியாத நிலையில் உள்ளது.
மதுரை விமான நிலையம், முழுமையான அளவில் சுங்கவரி விமான நிலையமாக இயங்கிடத்தக்க வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் சார்பில் அயல்நாடுகளுடன் செய்து கொள்ளப்படுகின்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் பட்டியலில் மதுரை விமான நிலையம் இடம் பெற்றிடவும், இது குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தாங்கள் ஆவண செய்து தருமாறு வேண்டுகிறேன்’’என்று கூறியுள்ளார்.