கொட்டிக்கிடக்கும் இந்திய ஓவியங்கள்

art_001இந்திய ஓவியமானது வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது.

இந்தியாவின் பல வளர்ச்சிகளைப் போல், ஓவியமும் பல கிளைகளாக வளர்ந்து ஆங்காங்கே பரந்து விரிந்து நிற்கிறது.

ஆனாலும் இவை அனைத்தும் ஒரே விதையிலிருந்து தோன்றியவை அல்ல. இந்தியா என்ற குடைக்குக் கீழே பல சிறு குழுகளாக வளர்ந்தவை.

இப்பாணிகளை பக்தி சார்ந்த ஓவியங்கள், சமூக நிகழ்வுகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் என ஒரு பொதுவான தளத்தில் மட்டுமே ஒன்றாக கொண்டு வர முடியும்.

இந்திய வரலாற்றில் ஓவியங்கள் கடவுளரையும், அரசர்களையும் காட்டுவனவாகவே இருக்கின்றன.

இந்திய ஓவியம் என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் இருந்த பல்வேறு ஓவியப் பாணிகளை ஒருங்கே குறிக்கும் ஒரு தொடராகும்.

இது எல்லோராவில் காணும் பெரிய சுவரோவியங்கள் முதல் முகலாயரின் சிற்றோவியங்கள் வரை பல்வேறு அளவுகளில் உள்ள ஓவியங்களையும், உலோகங்களால் அழகூட்டப்பட்ட தஞ்சாவூர் பாணி ஒவியங்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது.

இந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை

மதுபானி ஓவியப் பாணி

மதுபானி ஓவியப் பாணி மிகவும் பழமையானது. இதன் தோற்றம் பற்றித் தெரியவில்லை. மரபுவழிக் கதைகள் இதை, இராமாயண காலத்துடன் தொடர்பு படுத்துகின்றன.

ஜனகரின் மகளான சீதையின் திருமணத்துக்காக, ஒவியர்களை ஜனகர் அமர்த்தியதாக அவை கூறுகின்றன.

மதுபானி ஓவியங்கள் மிதிலாவில் உள்ள மதுபானி என்னும் தற்கால நகரை அண்டி அமைந்துள்ள ஊர்களில் பெண்களாலேயே வரையப்பட்டு வந்தது.

மரபு முறையில், இவ்வோவியங்கள் புதிதாக மெழுகப்பட்ட மண் சுவர்களிலேயே வரையப்பட்டன.

ஓவியங்களுக்குரிய கருப்பொருள்கள் பெரும்பாலும் இந்துக் கடவுளரான, கண்ணன், இராமன், சிவன், துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி போன்றவர்களைக் குறிப்பதாகவே பெரிதும் காணப்படுகின்றன.

ராஜபுதன ஓவியப் பாணி

ராஜபுதன ஓவியப் பாணி என்பது இந்தியாவின் ராஜபுதனப் பகுதியில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது 18ம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது.

ராஜபுதன ஓவியங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சார்ந்த நிகழ்வுகள், கண்ணனுடைய வாழ்க்கை, அழகிய நிலத்தோற்றங்கள், மனிதர் போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களைக் கொண்டவையாக விளங்குகின்றன.

தஞ்சாவூர் ஓவியப் பாணி

தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும்.

பல்வேறுபட்ட காலகட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களினூடாக ஆந்திரக் கலைப் பாணி, மராட்டியர்களினூடாக மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணி, ஆங்கிலேயரினூடாக மேனாட்டுக் கலைப் பாணியின் தாக்கங்களைப் பெற்றது.

முகலாய ஓவியப் பாணி

முகலாய ஓவியம் என்பது 16ம் நூற்றாண்டு தொடக்கம். 19ம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் இருந்த முகலாயப் பேரரசுக் காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும்.

இது பொதுவாகப் புத்தகங்களிலும், சிறு அளவினதாகவுமே வரையப்பட்டன.

பசோஹ்லி ஓவியப் பாணி

பசோஹ்லி என்பது பண்டைக்காலத்தில், இன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரவி ஆற்றங்கரையில் இருந்த விஸ்வஸ்தாலி என்னும் நாட்டைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனக் கருதப்படுகின்றது.

இவ்வாறான ஓவியங்கள் நம் இந்திய மக்களிடையே பரவலாக அறியப்பட்டாலும் இந்த ஓவியங்கள் ஒவ்வான்றும் தன்னத்தே கதைகளையும் கொண்டு சித்தரித்துள்ளது.

TAGS: