பாஜகவை விஷத் தன்மையுடையவர்களின் கட்சி என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியிருப்பதற்கு, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரசை விட அதிக விஷத்தன்மையுடைய கட்சி வேறு கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பாஜகவை விஷத் தன்மை கொண்டவர்களின் கட்சி என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பன்ஸ்வாராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஜெய்ப்பூரில் இளவரசர் (ராகுல்காந்தி) ஒருமுறை பேசும்போது, பதவி என்பது விஷம் போன்றது என்று தனது தாயார் (சோனியா காந்தி) தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டை அவர்கள்தான் (காங்கிரஸ்தான்) நீண்டகாலம் ஆட்சி செய்தனர். அப்படி என்றால் விஷத்தை (பதவி) யார் நீண்டகாலம் சுவைத்தார்கள்? வேறு எந்த கட்சியும் அல்ல, காங்கிரஸ் கட்சிதான். இதனால், அக்கட்சியை விட வேறு எந்தக் கட்சி அதிக விஷத்தன்மை கொண்டதாக இருக்க முடியும்?
ஊடகங்கள் தன்னை சுற்றி இருக்கும்போதுதான், ஏழைகள் குறித்தும், வறுமை குறித்தும் இளவரசர் (ராகுல் காந்தி) பேசுகிறார். தன்னை புகைப்படக்காரர்கள் சூழ்ந்திருக்கும்போது, ஏழைகள் குறித்து தாம் வருத்தம் அடைந்திருப்பதாக காட்டிக் கொள்ள அவர் அப்படி பேசுகிறார்.
விலைவாசி அதிகரிப்பு: தில்லியில் ராகுல்காந்தியின் பங்களா அருகில், குடிசைப்பகுதி அமைந்துள்ளது. அங்கு 800 குடிசைகள் இருந்தும், இரண்டு பொதுக் கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் கழிப்பறைக்கு செல்ல தங்களது முறை வருவதற்காக அப்பகுதி மக்கள், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதுவெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கண்களுக்கு தெரிவதில்லை. ஊடகங்கள் தன்னை சுற்றி இருக்கும்போதுதான் அக்கட்சிக்கு வறுமை தெரிகிறது.
முந்தைய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி விடுவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஆனால் நடந்தது என்ன? விலைவாசி அனைத்தும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்து விட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகிய மூன்று தலைவர்களும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட விலைவாசி உயர்வு குறித்தும், அதனை கட்டுப்படுத்த தங்களது (மத்திய) அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் பேசவில்லை.
ஷபாஸ்! சரியான போட்டி…….