பரபரப்பும் அரசியல் முக்கியத்துவமும் நிறைந்த ராஜீவ் காந்தி கொலைவழக்கில், முக்கியக் குற்றவாளிகளான பிரபாகரனோ, பொட்டு அம்மானோ, சிவராசனோ, தனுவோ பிடிபடவே இல்லை. நிச்சயமாகத் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டவர்களில், நளினியைத் தவிர மற்றவர்கள் தண்டனைக் காலத்தையும் கழித்து விட்டனர்.
எஞ்சி இருப்பவர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவர் மட்டுமே. இந்தநிலையில் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலம் அவர் சொன்னபடியே பதிவு செய்யப்படாமல், திருத்தி பதிவு செய்யப்பட்டது என்று சிபிஐ முன்னாள் அதிகாரியும் இந்த வழக்கை விசாரித்தவருமான வி.தியாகராஜன் பேட்டி அளித்திருக்கிறார்.
ராஜீவ் காந்தியைக் கொல்லப் பயன்பட்ட வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு. இந்த பேட்டரி எந்த நோக்கத்துக்காக பயன்படப்போகிறது என்பது தெரிந்தே அவர் வாங்கிக் கொடுத்தார் என்ற அடிப்படையில்தான் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து அவர் அறிந்திருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையைச் சேர்ந்தது. இதனால் வாக்குமூலத்தை மாற்றி எழுதினோம் என்று விசாரணையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி இன்று சொல்கிறார்.
உயர்அதிகாரிகளின் நெருக்குதல் காரணமாக, அதிகாரி தியாகராஜன் பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திருத்தி எழுதியிருக்கலாம். தனது பதவிக்கு ஆபத்து வரும் என்ற பயத்தினால் இத்தனை காலம் மனசாட்சியை அவர் உறங்க வைத்திருக்கலாம். 22 ஆண்டுகள் கழித்து, தனது மனசாட்சியை விழிக்கச்செய்து இப்போதுதான் அவர் மனம் திறந்திருக்கிறார். அவரது பேட்டி வேறு பல கேள்விகளை எழுப்புகிறது.
வாக்குமூலம் திருத்தி எழுதப்பட்ட உண்மை தியாகராஜனுக்கு மட்டுமல்ல, நிச்சயமாக பேரறிவாளனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். தனது வாக்குமூலத்தை தியாகராஜன் முழுமையாக பதிவு செய்யவில்லை என்றோ, மாற்றி எழுதியிருக்கிறார் என்றோ பேரறிவாளன் நீதிபதி முன்பாக சொல்லியிருந்தால் மட்டுமே, இப்போது அதிகாரி தியாகராஜனின் மனசாட்சி விழிப்புக்கு பலன் கிடைக்கும். அவ்வாறு பேரறிவாளன் தனது வாக்குமூலம் குறித்து வழக்கின்போது எந்த மறுப்பும் சொல்லாமல் இருந்திருப்பாரேயானால், இப்போது தியாகராஜன் சொல்லும் மனசாட்சி விழிப்பு வெறும் பரபரப்பு செய்தியாக மட்டுமே முடிந்துபோகும். சட்டத்தின் முன்னால் இவரது காலம்தாழ்ந்த மனசாட்சி விழிப்பு எடுபடாது.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக, தூக்கிலிடப்படாத தூக்கு தண்டனை கைதியை விடுவிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் குரல்கள் எழும் இவ்வேளையில், இத்தகைய பொய்யான வாக்குமூலம் தயாரிப்பு தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்போது, ஏற்கெனவே நடந்தேறிய விசாரணைகள் அனைத்தும் பொய்யாகிவிடுகிறது. மீண்டும் மறுவிசாரணையைத் தொடங்கவோ அல்லது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யவோ வேண்டும் என்ற நிலைக்கு நீதித்துறை தள்ளப்படுகிறது. அது சாத்தியம்தானா என்பது அடுத்த கேள்வி.
வாக்குமூலத்தைத் திருத்திய அதிகாரி தியாகராஜனுக்கு என்ன தண்டனை? இவ்வாறு திருத்தி எழுதச் சொன்னவர்களுக்கு என்ன தண்டனை? தூக்குத்தண்டனை கைதியாக, நாளும் பொழுதும் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கும் ஒரு கைதியின் வாழ்க்கை குறித்த உண்மையைச் சொல்ல 22 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? பேரறிவாளன் தூக்கிலிடப்பட்டிருந்தால், அதிகாரி தியாகராஜனின் மனசாட்சி விழித்தால் என்ன, அப்படியே கண்மூடிப்போயிருந்தால்தான் என்ன?
அதிகாரிகளின் மனசாட்சி இவ்வளவு தாமதமாக விழிப்பது அவர்களுக்கும் நல்லதல்ல, குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நல்லதல்ல; இத்தகைய காலம் கடந்த ஞானம், அரசியலாகத்தான் பார்க்கப்படுமே தவிர, மனசாட்சியின் விழிப்பாகப் பார்க்கப்படுவதில்லை.
கோத்ரா கலவரத்தை அடக்காமல் வேடிக்கை பார்க்கச் சொன்னதாக குஜராத் முதல்வர் மோடி என்னிடம் கூறினார் என்று இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வதும், ஓய்வு பெற்று வெளியே வந்த பிறகு ராணுவத்தில் ஊழல் நடந்தது என்று பேசுவதும், கொலை செய்த நபரை பிடிக்க முடியாமல் அப்பாவிகள் இருவரைப் பிடித்து சிறையில் அடைத்தேன் என்று பல ஆண்டுகள் கழித்து ஒப்புக்கொள்வதும், வாக்குமூலத்தைத் திருத்தினேன் என்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வதும், அதிகாரிகளை நேர்மையானவர்களாகவோ, மரியாதைக்குரியவர்களாகவோ ஆக்காது. சட்டமும் இவர்களுக்குத் துணை நிற்காது. சுய விளம்பரம் தேடிக் கொள்ளவும், அரசியல் சாயம் பூசிக் கொள்ளவும்தான் இவை உதவும்.
காலம் கடந்த மனசாட்சியின் விழிப்பு அரசியல்நிறம் கொள்கிறது.
கார்த்திகேசு கொலை வழக்கு !! நம் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு கட்டாய தூக்கு தண்டனை ! வழக்கு முடியும் தருவாயில் சாட்சி ஒரு பல்ட்டி அடித்தார் ? நான் இதற்குமுன் பொய்யான வாக்குமூலம் கொடுத்துவிட்டேன் , மன்னியுங்கள் , குற்றம் சுமத்தப்பட்டவர் விடுதலையானார் – சாட்சி சொன்னவர் சிறைக்குப்போனார். உண்மை சம்பவம். திருத்தி எழுதிய இந்த அதிகாரி கூண்டில் ஏறவேண்டும் , குற்றவாளி விடுதைலை ஆகா வேண்டும் !! நடக்குமா ??
மக்களை பாதுகாக்க வேண்டிய நீங்கள்,பதவி,பணத்திற்காக எதை எதையோ செய்கிறிர்கள்!
படு பாவி, இன துரோகியே
உனக்கு என்ன தண்டனை கொடுப்பது??
தொலைந்து போ!!! தொலைந்து போ!!!
ஒரு அப்பாவியின் பொன்னான காலத்தை கொன்று விட்ட பாவி..!
பச்சை துரோகி.காலம் கடந்த ஞானம்! உன்னால் பாதிக்கப்பட்டவரின் நிலை ?