காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை

jeyendrarkanchisankaracharyaகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலய மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி விஜயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் இன்று புதன் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அனைவரையும் விடுவிப்பதாக புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் குறிப்பிட்டார்.

2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள் சங்கரராமன் ஆலய வளாகத்திலேயே சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காஞ்சி மடத்தின் முன்னாள் ஊழியரான இவர் , ஜெயேந்திரர் மீதும் விஜயேந்திரர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் ஜெயேந்திரர் மடத்தின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டுமென வழக்கு தொடரவிருப்பதாக அவருக்கே சங்கரராமன் கடிதம் எழுதினார்.

இப்பின்னணியிலேயே 52 வயதான சங்கரராமன் கொலை செய்யப்பட்டார் எனும் காவல்துறை, ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தது.

வழக்கு விசாரணை சென்னையில் நடந்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது என ஜெயேந்திரர் தரப்பினர் முறையிட்டதன் பின்னணியில் வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. விசாரணை கடந்த 2005-ம் ஆண்டு முதல் புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரவி சுப்பிரமணியன் போலீஸ் தரப்பு சாட்சியானார். இன்னொருவர், கதிரவன், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொலை செய்யப்பட்டார்.

எஞ்சிய 23 பேர் மீதே வழக்கு விசாரணை முடிந்து இப்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இளைய மடாதிபதி விஜயேந்திரர்

 

அப்ரூவர், கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி உட்பட பலர் சங்கர மட நிர்வாகத்தின் மீது பரபரப்பான புகார்களைக் கூறினர்…ஆனால் அவற்றை பின்னர் திரும்பப் பெற்றனர். இவ்வாறாக விசாரிக்கப்பட்ட 187 சாட்சியங்களில் அப்ரூவர் உட்பட 82 பேர் பிறழ் சாட்சியங்களாக அறிவிக்கப்பட்டனர்.

தீர்ப்பு வெளியானவுடன் நீதி மன்ற அறையிலிருந்து வெளி வந்த மடாதிபதிகள் இறுக்கமான முகத்துடனேயே காணப்பட்டனர். அவர்களும், சுந்தரேசய்யர், ரகு உள்ளிட்ட விடுதலை செய்யப்பட்ட உதவியாளர்களும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த செய்தியாளர்களுடன் எதுவும் பேசாமல் வாகனங்களில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஆனால் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்த காஞ்சி மட பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

விடுதலை: ஒரு பக்தரின் மகிழ்ச்சி

 

ஒரு முதியவர் நீதிமன்ற வாயிலில் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து, நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து மடாதிபதிகள் விடுதலைக்காக இறைவனுக்கு நன்றி சொன்னார்.

காஞ்சி மட வழக்கறிஞர் கே.எம்.சுப்பிரமணியனுடன் பேசியபோது அரசு மேல் முறையீடு செய்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.

பிராசிக்யூஷன் தரப்பு வழக்கறிஞர் என்.தேவதாஸ் தீர்ப்பு தனக்கு ஏமாற்றளிப்பதாகக் குறிப்பிட்டார்

ஒரு சில வழக்கறிஞர்கள் வளாகத்தின் முன் நின்று தீர்ப்பிற்குக் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் தழுவிய அளவில் இது போன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினர் எவரும் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. ஆனால் பின்னர் செய்தியாளர்களிடம் சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா தீர்ப்பு குறித்து தாங்கள் வருந்துவதாகக் கூறினார்

அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடுக்கப்பட்ட காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு பின்னர் வந்த திமுக ஆட்சிக்காலத்தில் உரிய கவனம் செலுத்தப்படாமையால் பல சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியதன் விளைவே இன்றைய தீர்ப்பின் அடிப்படை என்கிறார் அரசியல் விமர்சகர் ஞானி சங்கரன். -BBC

TAGS: