பா.ஜ., ஆட்சியின் போதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது: சிதம்பரம் குற்றச்சாட்டு

qwபுதுடில்லி : பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலத்திலேயே சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய துவங்கியது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக சிதரம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் குற்றச்சாட்டு :

குஜராத் முதல்வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரலாறு தொடர்பான தவறான தகவல்களை தருவதாகவும் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். மோடியின் தவறான தகவல் சேகரிப்பு பதிவில் இதுவும் ஒன்று என தெரிவித்த சிதம்பரம், ரூபாயின் வீழ்ச்சி துவங்கியதே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில் தான் என தெரிவித்துள்ளார். 1998ம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39.49 ஆக இருந்ததாகவும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை எனவும் மோடி தெரிவித்திருந்தார்.

வரலாற்று சான்று :

மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சிதம்பரம் வரலாற்றை எடுத்துக்காட்டாக கூறினார். அப்போது அவர் கூறியதாவது : 1999ம் ஆண்டு மே மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த போது ரூபாய் மதிப்பு 42.84 ஆக சரிந்தது; பின்னர் மீண்டும் 2004ம் ஆண்டு மே 21ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவை சந்தித்து 45.33 ஆனது; பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலத்தில் மட்டுமே ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

TAGS: