மின்வெட்டு: திமுக- காங்கிரஸ் கூட்டுச் சதி: ஜெயலலிதா

jaya_speechமின்வெட்டு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் கைகோர்த்துக் கொண்டு தமிழக மக்களை பழிவாங்குவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.

“மின்பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது அல்ல; திமுகவின் மறைமுக ஆலோசனையின் பேரில் மத்திய அரசு செய்யும் சதித் திட்டம் தானோ’ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியில் 9 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்காக அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. மின் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக மின்வெட்டு படிப்படியாகக் குறைந்து, கடந்த ஜூலை மாதம் முதல் நிலைமை முழுவதும் சீர் செய்யப்பட்டு மின் வெட்டே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போதும் இதை பெருமிதத்துடன் தெரிவித்திருந்தேன். ஆனால், சொல்லி வைத்தாற்போல இதற்கு அடுத்த வாரமே பல மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் நிலையங்கள் தொடர்ந்து நல்ல நிலையில் இயங்குகின்றன.

ஆனால் கல்பாக்கம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்தான் சொல்லி வைத்தாற்போல ஒரே நேரத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, மத்திய அரசு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அனல் மின் நிலையங்களில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை: மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி, நாப்தா ஆகியவற்றுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2,500 மெகாவாட் மின் பற்றாக்குறையும், இதன் விளைவாக வேறு வழியின்றி மீண்டும் மின் வெட்டு செய்ய வேண்டிய கட்டாயச் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த மின்வெட்டு பிரச்னையைத்தான் திமுகவினர் இடைத் தேர்தல் பிரசாரத்தில் சொல்லிக் கொண்டு வருகின்றனர். மின்வெட்டே இல்லை என்று முதல்வர் பெருமைப்பட்டார். ஆனால், சில நாள்களிலேயே மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதே என்று அவர்கள் குதர்க்கமாகப் பேசுகின்றனர். இதிலிருந்து இந்த மின் பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது அல்ல என்ற எண்ணமும், திமுகவின் மறைமுக ஆலோசனையின் பேரில், மத்திய அரசு செய்யும் சதித் திட்டம்தானோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

அடிபணியாததால் பழிவாங்குகின்றனர்: மத்திய அரசுக்கு நான் அடிபணிய மறுக்கிறேன் என்பதால், என் மீதான காழ்ப்புணர்வு, கோபம் காரணமாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் கைகோத்துக் கொண்டு தமிழக மக்களைப் பழிவாங்குகின்றனர்.

இதுபோன்ற மக்கள் விரோதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு இடைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவர்களின் சூழ்ச்சியை எதிர்கொண்டு மின் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளிப்பேன்.

எல்லாவிதங்களிலும், எல்லா வழிகளிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தை, தமிழக மக்களை வஞ்சித்த மத்திய அரசை எதிர்கொண்டுதான் எனது தலைமையிலான அரசு அளப்பரிய சாதனைகளைப் புரிந்துள்ளது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதேபோன்று, இப்போது காங்கிரஸ், திமுகவால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைச் சரி செய்து, மின்வெட்டே இல்லாத ஒளிமயமான, சுபிட்சமான நிலையை விரைவில் உருவாக்கியே தீருவேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தடைந்தார். ஏற்காடு தொகுதியில் உள்ள 9 முக்கிய இடங்களுக்கு வேன் மூலம் சென்று சுமார் 7 மணி நேரம் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட அவர், மாலையில் திருச்சி வழியாக மீண்டும் சென்னை திரும்பினார்.

TAGS: