காங்கிரஸ் அரசின் மீதான நடுத்தர மக்களின் கோபம்; மோடிக்கு ஆதரவாக மாறுமா?

narendra_modiபுதுடில்லி : 2014 லோக்சபா தேர்தலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் மோடியை பிரதமராக ஆதரிப்பார்களா? குஜராத்தில் மோடியால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்படுமா? ஆகியன பெரும்பாலான மக்களின் கேள்வியாக உள்ளது.

பதில் கூறும் குஜராத் :

நாடு முழுவதிலும் உள்ள நடுத்தர மக்கள் மோடியை ஆதரிப்பார்களா என்ற கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன் குஜராத்தில் நடுத்தர மக்கள் மோடியை எவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். குஜராத்தில் மோடியால் கொண்டு வரப்பட்ட பொருளாதார வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியன அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வைத்து நடுத்தர மக்களை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையான காரணமா என ஆராய்ந்தால், ஆம் பதிலே கிடைக்கிறது. மோடி முதல்வராக வருவதற்கு முன் குஜராத்தில் பா.ஜ., வின் செல்வாக்கு பின்தங்கியே இருந்துள்ளது. குஜராத்தின் கிராமம் மற்றும் நகர்புறங்களில் மோடி காலத்திலேயே பா.ஜ.,வின் ஆதிக்கம் உயர்ந்துள்ளது.

மோடியின் செல்வாக்கு :

சட்டமன்ற அல்லது லோக்சபா தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது 1984-85 ம் ஆண்டில் ராஜீவ் புகழ் ஓங்கி இருந்தது. இருந்த போதும் அதற்கு பின்னர், குறிப்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ., தோல்வி அடையவில்லை. குஜராத்தில் பட்டேல் இனத்தவர்களின் பெரும் அளவிலான ஆதரவு பா.ஜ.,விற்கு இருந்தது. இது குஜராத்தில் பா.ஜ.,வை தொடர்ந்து பலம் மிக்க கட்சியாக உருவாக்க காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் ஜாதி அடிப்படையில் பா.ஜ.,வின் ஆதிக்கம் குஜராத்தில் அதிகரித்தாலும், பின்னர் படிப்படியாக மோடியின் செயல்பாடுகள் மக்களின் மனதில் ஜாதி பேதங்களை கடந்த மதிப்பை மோடி மீது ஏற்படுத்தியது. இதுவே குஜராத்தில் பா.ஜ., வெல்ல முடியாத மிகப் பெரிய கட்சியாக உருவாக்கியது. குஜராத்தில் நடுத்தர மக்கள் மோடியை ஆதரிக்க ஜாதி கட்சிகளுடனான கூட்டணியா அல்லது பா.ஜ.,மீதும் மோடி மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையா என்று பார்த்தால் ஜாதி கட்சிகளின் கூட்டணி என்பது தற்போதைய காலகட்டத்தில் சாத்தியமற்றதாகும்.

பயனளிக்காத ஜாதி கட்சிகள் :

நாடு முழுவதும் நடுத்தர மக்கள் மோடியை ஆதரிப்பதற்கும் ஜாதி கட்சிகளுடனான கூட்டணி பயனளிக்காது. இது நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் போது மக்களின் மனநிலையை மாற்றாது. உத்திர பிரதேசத்தில் யாதவர்களே அதிகம், ஆந்திராவில் ரெட்டி இனத்தவர்களே அதிகம். அவர்கள் ஜாதி அடிப்படையில் ஓட்டளித்தாலும், பிற உள்ளூர் ஜாதி கட்சிகளின் ஆதரவு தேவை. இது 2014 தேர்தலின் போக்கை மாற்றாது. ஆனால் மோடி மீதான தனிப்பட்ட நம்பிக்கை மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதேசமயம் சென்னை மற்றும் கோல்கத்தா போன்ற நகரங்கள் இதற்கு விதிவிலக்காகவே இருக்கும். தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் பா.ஜ.,விற்கு பெரிதாக கூறும் அளவிற்கு செல்வாக்கு இல்லை என்பதால் அங்கு மோடியின் செல்வாக்கு பலிக்குமா என்பது சந்தேகமே. தமிழகத்தில் திராவிட கட்சிகளும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் ஆதிக்கம் பெற்றுள்ளதால் பா.ஜ.,விற்கு அது பின்னடைவாகவே இருக்கும்.

பெருநகர ஆதரவு :

நாட்டின் பிற பகுதிகளில் மத்திய அரசின் மீது மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கொண்டுள்ள வெறுப்பு, கோபம் ஆகியன நிச்சயம் மோடி மீதான ஆதரவை பல மடங்கு அதிகரிக்க செய்யும். டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மோடியின் செல்வாக்கே ஓங்கி நிற்கும். இருப்பினும் பெருநகரங்களை மட்டும் கணக்கிட்டால் பா.ஜ.,விற்கு 24 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கலாம். ஆனால் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் மனநிலையை சரியாக கணிக்க முடியாமல் இருப்பதால் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. பொதுவாக ஜாதி அடிப்படையிலான ஓட்டுக்கள் அதிகளவில் பதிலாகும் என்றாலும் தற்போது நடுத்தர மக்களிடையே அதிகரித்து வரும் அரசியல் விழிப்புணர்வால், தற்போதைய விலைவாசி உயர்வு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மக்களிடையே ஏற்பட்டு வரும் அரசியல் விழிப்புணர்வு மிக விரைவிலோ அல்லது படிப்படியாகவோ இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்றே கூறலாம். இந்த அரசியல் மாற்றம் 2014 தேர்தலில் நரேந்திர மோடியால் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TAGS: