என் மகன் மேல இருந்த அழுக்குக் கறை போயிடுச்சு! இனியாவது அவனை வாழவிடுங்க!- பேரறிவாளனின் தாய்

atputhammaall1983-ம் வருஷம் ஈழப் பிரச்சினை தமிழ் நாட்டுல தலைதூக்கியது. ஈழத்துல இருக்கும் எல்லா ஈழத் தமிழர்களுக்கும் உதவி செய்யணும்னு தமிழ்நாட்டில் நிறைய பேர் பேசினார்கள். அவர்களுக்காக உதவியும் செய்தாங்க.

அறிவு… அறிவு என வார்த்தைக்கு வார்த்தை உச்சரிக்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

தியாகராஜன் வாக்குமூலம் இப்போது வெளியாகி இருக்கும் சூழ்நிலையில் அவரைச் சந்தித்த போது, பேரறிவாளனைப் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசினார் அற்புதம்மாள்.

எனக்கு மொத்தம் ரெண்டு பொண்ணு, ஒரு பையன். அறிவு, ரெண்டாவதாகப் பிறந்தான். 19 வயசு வரை எங்ககூடவே இருந்தான். அதுவரை யாருமே அவனை சின்ன குற்றம் குறைகூட சொல்லாத அளவுக்கு நடந்துப்பான். யார் மனசையும் காயப்படுத்தி பேச மாட்டான். பிறர் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து கேட்பான். அதற்குக் காரணம் பெரியார் கொள்கைகளுடன் சேர்ந்து வளர்ந்தான் என்பதுதான்.

நாங்க எங்கே கூட்டம், ஆர்ப்பாட்​டம், மாநாடு என்றாலும் எங்க மூன்று குழந்தை​களையும் கூட்டிட்டுதான் போவோம். இந்த சமயத்துல 1983-ம் வருஷம் ஈழப் பிரச்சினை தமிழ் நாட்டுல தலைதூக்கியது. ஈழத்துல இருக்கும் எல்லா ஈழத் தமிழர்களுக்கும் உதவி செய்யணும்னு தமிழ்நாட்டில் நிறைய பேர் பேசினார்கள். அவர்களுக்காக உதவியும் செய்தாங்க.

அந்த சமயத்துல ஈழத்துல நடந்த சண்டைகள், படுகொலைகள், அதைப்பற்றியான காட்சிகளைப் பொது மக்களுக்கு கண்காட்சி​போல நடத்துவாங்க. அதை அறிவு முன்னாடி நின்று நடத்துவான். அதுல அவனுக்கு ஒருபெருமை. அதுவே, அவனோட வாழ்க்கை வீணாகக் காரணமாக இருந்துடுச்சே என்ற வருத்தம் இன்னும் எங்களுக்கு இருக்கு.

1991 மே 21 ராஜீவ் கொலை நடக்கிறது. ஜூன் 10-ம் தேதி இராத்திரி ஜோலார்பேட்டைக்கு போலீஸ்காரங்க வந்து அறிவைப் பற்றி விசாரிச்சாங்க. அப்போ அறிவு எழும்பூர் பெரியார் திடலில் இருந்தான்.

அவரைக் கூட்டிட்டு மல்லிகைக்கு வாங்க…’ என்று சொல்லிவிட்டுப் போனாங்க. அப்போதான் நாங்க முதலில் சி.பி.ஐ. ஆட்களைப் பார்த்தோம். ஜூன் 11-ம் தேதி அவங்க முதலில் கேட்ட கேள்வி நளினி எங்க இருக்கிறான்னு சொல்லு என்பதுதான். அதைப்பற்றி எனக்குத் தெரியாது என்று சொன்னான் அறிவு.

சரிம்மா… கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருக்கு. விசாரித்துவிட்டு காலையில அனுப்பிடறோம். இல்லை நீங்களே வந்து காலையில கூட்டிட்டு போங்கனு சொன்னாங்க. நாங்களும் இவ்வளவு நல்லா பெருந்தன்மையாக பேசுறாங்களே… நேர்மையாதான் இருப்பாங்கனு நினைச்சோம். அதுக்கப்புறம் எட்டு நாள் அவனை விடவே இல்லை.

பெரியார் திடல் பக்கத்துல சுத்திட்டு இருக்கும்​போது அறிவைக் கைது செய்ததாக பத்திரிகைக்கு சி.பி.ஐ. செய்தி கொடுத்தது. அறிவை ஜட்டியோட உட்கார வெச்சு எவ்வளவு கொடுமைப் படுத்தணுமோ… அவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்காங்க. அவங்களே ஏதோ எழுதி கையெழுத்து வாங்கி இருக்காங்க. அதுதான் இப்போ அவன் கழுத்துல தூக்குக் கயிறா வந்து நிக்குது.

இத்தனை ஆண்டுகள் கழித்து உண்மை வெளியே வந்திருக்கிறது. அறிவு வாக்குமூலத்தை வைத்துதான் சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இப்போது அந்த வாக்குமூலத்தை எழுதியவரே உண்மையைச் சொல்லிட்டாரு. இப்போ என்ன சொல்லப் போறாங்க?

ஆரம்பத்துல இருந்தே என் பையன் அறிவு நிரபராதி என்றுதான் சொல்றோம். என் மகன் மேல இருந்த அழுக்குக் கறை போயிடுச்சு.

22 ஆண்டுகள் சிறைக்குள்ளேயே அவன் வாழ்க்கை, இளமை, கனவுகள் எல்லாத்தையும் சிதைச்சுட்டாங்க. யாரோ செய்த தவறு இவன் வாழ்க்கையை திசை மாற்றிடுச்சு. இனியாவது அவனை வாழ விடுங்க. கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிடுகிறார் அற்புதம்மாள்.

உண்மையான குற்றவாளிகளை சோனியா அறிவார்!- திருச்சி வேலுசாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. கிடைத்த அப்பாவிகளை வைத்து சி.பி.ஐ-யே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் என்று இந்த உண்மைகளை 1995-ல் நான் முதன்முதலாகச் சொன்னேன்.

என் நண்பர்களே என்னைப் பைத்தியக்காரனாகவும், காமெடியனாகவும் பார்த்தனர். என்னுடன் பேசிப் பழகவே பயந்தனர். நான் எதையுமே சட்டை செய்யவில்லை. பேரறிவாளன், சாந்தன் போன்றவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

18 ஆண்டுகள் கழித்து இதோ தியாகராஜன் ரூபத்தில் உண்மை வெளியில் வந்துவிட்டது” என்று பேசத் தொடங்கினார் திருச்சி வேலுசாமி.

இந்த நாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ-யில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி தனது வாக்குமூலத்தில், ‘இப்படி எழுதுவது சகஜம்’ என்று சொல்வது மக்கள் மனதில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் கடைநிலை ஊழியர் செய்யும் தவறைவிட மிகமோசமானது இது. இந்த நாட்டின் நீதித் துறையும், புலனாய்வு அமைப்புகளும் எவ்வளவு மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.

அப்போது இருந்த சூழல் என்னை அப்படித்தான் செய்ய வைத்தது. இதைச் செய்யாமல் இருக்க முடியாது அன்றைய நிலை என்றும் சொல்லி இருக்கிறார். அப்போது அந்த நிர்ப்பந்தத்தை, அழுத்தத்தை தந்தது யார் என்பதையாவது அவரிடம் விசாரிக்க வேண்டும்.

சரி, அவர் சொன்னது பேரறிவாளனுக்கு மட்டும் பொருந்துமா… இல்லை முருகன், சாந்தனுக்கும் பொருந்துமா?

அவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்டுத்தான் இருக்கிறது. அவர்களது வாக்குமூலங்களும் உண்மையாகப் பதிவு செய்யப்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். 23 ஆண்டுகள் ஆகி விட்டன. மக்கள் பணத்தில் பல கோடி செலவு செய்தனர். ஆனால், யாருக்குமே இதில் உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வம் இல்லை.

எப்படி இதில் அரசியல் செய்வது என்பதில்தான் எல்லோரும் குறியாக இருந்தனர். சிலர் தேர்தல் சமயத்தில் தங்களது தேவையைத் தீர்த்துக் கொள்ள இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தனர் என்பதுதான் உண்மை.

நீங்கள் அன்றே சோனியாவை சந்தித்து இதுகுறித்து எல்லாமே வெளிப்படையாக சொன்னீர்கள் அல்லவா?

ஆமாம்… உண்மையில் குற்றவாளிகள் யார் என்பதும் சோனியாவுக்கு தெரிந்து இருக்கக்கூடும். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் இருக்கிறார்களா… என்பது கேள்விக்குறிதான். இந்தக் கொலைக்குப் பின் சர்வதேச சதி இருப்பதை நான் உணர்கிறேன்.

எனக்குத் தெரிந்து இருக்கும் இந்த உண்மை ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. தனது காதல் கணவன் பொட்டலமாகக் கட்டிவந்த கொடூரத்தை சோனியா பார்த்திருக்கிறார்.

தனது குடும்பத்தில் இந்திரா, சஞ்சய், ராஜீவ் ஆகிய மூன்று பேரை பதைக்க பதைக்க பலி கொடுத்ததைக் கண்ட சோனியாவும் ஒரு பெண்தான்.

ஒருவேளை, சோனியா காந்தியே உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கச் சொன்னால் 24 மணி நேரத்தில் ஆட்சியையே கவிழ்த்துவிட முடியும்.

அவர்களுக்கு பின்னால் இருப்பது சர்வதேச சதி. இந்தச் சதி வலை அவ்வளவு சீக்கிரமாக வெளியில் வராது. ஆனால் வரவேண்டும். வரும்! என்று வெடித்து முடித்தார்.

TAGS: