பேரறிவாளனின் வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்கப்படவில்லை!- சிபிஐ அதிகாரி கார்த்திகேயன்!

karthikeyanசிபிஐ அதிகாரி தியாகராஜனின் தற்போதைய பேச்சால் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எந்த பாதகமும் இல்லை. சட்டம், நீதித்துறையை நன்கு தெரிந்தவர்களுக்கு இந்த விவரம் தெரியும். என ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ-யின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ-யின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயனிடம், தியாகராஜனின் பேட்டி பற்றிக் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,

நான் அவரைப் பார்த்து பத்து வருடமாச்சு. தொடர்பே இல்லை. 22 வருடம் கழித்து ஏன் அப்படி பேசினார்னு தெரியலை.

பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து மட்டும் தண்டனை வழங்க மாட்டார்கள். பல்வேறு சாட்சியங்கள், ஆவணங்களை பரிசீலித்துதான் வழங்குவார்கள்.

எனவே, தியாகராஜனின் தற்போதைய பேச்சால் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எந்த பாதகமும் இல்லை. சட்டம், நீதித்துறையை நன்கு தெரிந்தவர்களுக்கு இந்த விவரம் தெரியும்.

ஆனால் சிலர், குறுகிய ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பயன்படுத்தப் பார்க்கிறார்களே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

இப்படியே போனால், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி… போன்ற தலைவர்களின் இறப்பு விவகாரத்தில்கூட ஏதாவது பிரச்சினையை கிளப்புவார்கள். என்னதான் முடிவு? என்றார்.

தண்டனைக்குக் காரணமான நான்கு விஷயங்கள்!

ராஜீவ் காந்தி கொலைவழக்கின் விசாரணை அதிகாரியும் சி.பி.ஐ-யின் முன்னாள் எஸ்.பி-யுமான ரகோத்தமனிடம் தியாகராஜனின் பேட்டி பற்றிக் கேட்டபோது அவர் கூறியதாவது,

முதலில் தியாகராஜன் சொன்ன பற்றரி விஷயத்துக்கு வருகிறேன். ஒன்பது வோல்ட் பற்றரிகள் இரண்டை சிவராசனுக்காக வாங்கிக் கொடுத்ததாக விசாரணையின் ​போது பேரறிவாளன் சொன்னார்.

நானும், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரனும் அப்போது பேரறிவாளனிடம் சில கேள்வி​களைக் கேட்டோம்.

ஒன்பது வோல்ட் பற்றரியில என்ன விசேஷம்? என்று கேட்டோம். அதற்கு அவர், வெடிகுண்டுத் தயாரிக்க ஒன்பது வோல்ட் பற்றரி இருந்தால், வீக் ஆகாமல் நல்லா ஸ்ட்ராங் ஆக இயங்கும் என்று சிவராசன் சொன்னதாக பேரறிவாளன் எங்களிடம் சொன்னார்.

பெல்ட் குண்டு தயாரிக்க இந்த பற்றரி ரொம்ப முக்கியம். எதற்காக பெல்ட் குண்டு தயாரிக்கப்பட்டது என்பது பேரறிவாளனுக்குத் தெரியும். அதிலும், ஒன்பது வோல்ட் பற்றரியை மயிலாப்பூரில் உள்ள ஒரு கடையில் இருந்துதான் பேரறிவாளன் வாங்கினாராம்.

இதேபோலவே, இதற்கு முன்புகூட, முருகன் மற்றும் புலிகள் இயக்கத்தினருக்காக வேறு சில ரக பற்றரிகளை பேரறிவாளன் வாங்கியிருக்கிறாராம். அப்படித்தான், சிவராசன் பற்றரி வேணும் என்று பேரறிவாளனிடம் கேட்டாராம்.

தனக்குத் தெரிந்த மயிலாப்பூர் கடையில் பற்றரியை வாங்கியதாக விசாரணையின் போது எங்களிடம் சொன்னார். அந்தக் கடைக்காரரும் இதுபற்றி விரிவாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது விஷயம்.. வயர்லெஸ் செட் இயக்க 12 வோல்ட் பற்றரியை சிவராசனுக்கு பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு கடையில் ராஜன், மகாலிங்கபுரம் என்கிற பெயரில் பில் போட்டு, அதில் இவர் கையெழுத்துப் போட்டு வாங்கியிருக்கிறார். சதிச் செயல் செய்யப்போவதை தெரிந்துதானே போலி பெயர், முகவரியைக் கொடுத்திருக்கிறார்.

மூன்றாவது… கவாசாகி பஜாஜ் பைக். இதையும் சென்னை அண்ணாசாலையில்தான் ஒரு கடையில் பேரறிவாளன் தனது பெயரில் புக் செய்திருக்கிறார். அதை டெலிவரி எடுத்தது சிவராசன்.

நான்காவது விஷயம்… ‘சைத்தானின் படை’ என்கிற புத்தகத்தை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரின்டிங் பிரஸ்ஸில் இங்கிலாந்தில் பிரின்டிங் செய்தது போல அச்சடித்தடித்திருக்கிறார்கள். அந்த பிரஸ்சுக்கு பணம் செலுத்தியது பேரறிவாளன்தான். இவை எல்லாம் எதற்காக யாருக்காக என்று பேரறிவா​ளனுக்கு நன்றாகவே தெரியும்.

ஆக, பேரறிவாளனின் வாக்குமூலத்தை வைத்தோ, தியாகராஜனின் எழுத்தை வைத்தோ தண்டனை தரவில்லை. அதுதவிர, மேலே சொன்ன விஷயங்களையும் வைத்துதான் பேரறிவாளனுக்கு கோர்ட் தண்டனை வழங்கியது என்றார்.

பேரறிவாளனுக்கு ராஜீவ் கொலை பற்றி முன்பே தெரிந்திருக்கவில்லை!- சி.பி.ஐ. அதிகாரியின் பதற்றம்

பேரறிவாளனின் வாக்குமூலம் என்ற ஒற்றை சாட்சியம்தான், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எதிரான வலுவான சாட்சி. அதுதான் பேரறிவாளனை இப்போது தூக்குக் கொட்டடியில் துடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன்,

அந்த வாக்குமூலம் முழுமையாகப் பதிவாகவில்லை. பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பேரறிவாளன் ஒரு நிரபராதி என்று இப்போது தெரிவித்துள்ளார். இந்தியத் துணைக்கண்ட நீதியியல் வரலாற்றின் நெஞ்சை உலுக்கும் இந்த உண்மையை, ‘உயிர் வலி’ என்னும் ஆவணப்படத்தில் தியாகராஜன் பதிவுசெய்துள்ளார்.

அதில் அவருடைய வார்த்தைகள்.

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்​பட்டபோது நான், சி.பி.ஐ-யின் கேரளப் பிரிவில் கண்காணிப்பாளராக இருந்தேன். தமிழ் தெரிந்த எஸ்.பி. என்ற அடிப்படையில் நான் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக் குழுவுக்கு அனுப்பப்பட்டேன்.

ஒவ்வொருவருக்கும் ஒரு அசைன் மென்ட் கொடுக்கப்பட்டது. எனக்கு, வாக்கு​மூலங்களை வாங்கிப் பதிவுசெய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதில் என்னை என்ன உறுத்துகிறது என்றால், நான் வாக்குமூலம் வாங்கும்போது அறிவு என்னிடம் சொன்னார்.

சார், எதுக்காகன்னு இது எனக்குத் தெரியாது. எதுக்காக என்னை பற்றரி வாங்கிட்டு வரச் சொல்றாங்க, அதை வெச்சு என்ன செய்யப் போறாங்கன்னு எனக்குத் தெரியவே தெரியாது என்று ஒரு வார்த்தை சொன்னார். ஆனால், அதை வாக்குமூலமாக எழுதும்போது, ‘எதுக்காகன்னு எனக்குத் தெரியாது என்று அறிவு சொன்னதை நான் எழுதவில்லை. அதை விட்டுவிட்டேன்.

சட்டப்படி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் போது, வார்த்தைக்கு வார்த்தை பதிவுசெய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே எழுத வேண்டும். சட்டம் அதைத் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் நாங்கள் அப்படி செய்வது இல்லை. இது எல்லா வழக்கிலும் சகஜமாக நடப்பதுதான்.

நான் அரைகுறையாக பதிவுசெய்த வாக்கு​மூலத்தை மேம்போக்காக எடுத்துக்கொண்டு பேரறிவாளனுக்குத் தூக்குத் தண்டனை எனும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். சிவராசனும் இவரும் உடந்தை. ராஜீவ் காந்தி கொல்லப்படப் போகிறார். ராஜீவைக் கொல்வதற்காக ஒரு வெடிகுண்டு செய்யப் போறாங்க. அதுக்கு ஒரு பற்றரி தேவைப்படுது என்பதெல்லாம் முன்கூட்டியே தெரிந்து, பேரறிவாளன் போய் பற்றரி வாங்கியது மாதிரி மேம்போக்காக எடுத்துக்கொண்டு தீர்ப்பு சொல்லிட்டாங்க.

ஸ்டெட்மென்ட்ல இல்லாத ஒன்றை நாமாக அர்த்தப்படுத்திக் கொண்டு யூகமாக முடிவுக்கு வர முடியாது. அது மிகமிக ஆபத்தானது. இதை நான் அப்பவே உணர்ந்தேன். ஆனா, அப்ப நான் ஒண்ணும் செய்யறதுக்கு இல்ல. ஆனா, அது என்னை இத்தனை வருஷமா உறுத்திக்கிட்டே இருந்தது.

நானும் இந்த நீதிப்பிழையில் ஒரு பங்கு வகிக்கிறேன். நான்தான் வாக்குமூலம் தயார் செய்தேன். அந்த வாக்குமூலங்கள் தெளிவாக இல்லை. ஆகவே, சந்தேகத்தின் பலனை அவர்களுக்குத் தரலாம்.

சந்தேகத்தின் பலன் என்று ஏன் சொல்ல வேண்டும்? சி.பி.ஐ-யிடம் இருக்கும் மற்ற ஆதாரங்கள்படி பார்த்தாலும், பேரறிவாளனுக்கு ராஜீவ் கொலை பற்றி முன்பே தெரிந்திருக்கவில்லை.

பேரறிவாளன் என்ன சொன்னார். மத்தவங்க என்ன சொன்னாங்க. போலீஸ் ஆபீஸர்ஸ் என்ன பதிவு செஞ்சாங்க என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க. ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முன், வயர்லெஸ் செய்திகள் பரிமாறப்படுகின்றன.

இங்கே இந்தியக் கடற்கரையில் இருந்து, அங்கே ஸ்ரீலங்கன் காடுகளுக்குள் அமைந்துள்ள எல்.டி.டி.ஈ. ஹெட் குவார்ட்டர்ஸுக்கு வயர்லெஸ்ஸில் தகவல்கள் போகின்றன.

ராஜீவ் கொலை பற்றி யாருக்கும் நாங்கள் சொல்லவில்லை. இது மிகவும் இரகசியமாக இருக்கிறது. நளினியைத் தவிர ராஜீவ் கொலை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது என்று சிவராசன் அந்த வயர்லெஸ் செய்தியில் சொல்கிறான். இதுதான் மிகமிக முக்கியமான, சந்தேகத்துக்கு இடமில்லாத, அழிக்க முடியாத ஆதாரம்.

இது, சி.பி.ஐ-யின் கோப்பில் இருக்கிறது. இதிலிருந்தும், அறிவுக்கு ராஜீவ் கொலை பற்றி முன்பே தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, கொலைச் சதியில் அவரை எப்படி சேர்க்க முடியும்? இது, அறிவுக்குப் புறம்பானது. சி.பி.ஐ. வசம் இருக்கும் ஆதாரங்களுக்கு எதிரானது.

ஆகவே, எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அவர்களைத் தூக்கிலிட்டால், அது மிக கொடுமையானது. அது நீதிப்பிழை. அது வேதனைக்குரிய நடக்கக் கூடாத நிகழ்வு என்பது என்னுடைய தீர்க்கமான எண்ணம். ஒரு குற்றமற்ற உயிர் எந்தக் காரணத்துக்காகவும் அறம் தப்பி தண்டிக்கப்படக் கூடாது. அது மிகப்பெரிய அநீதி என்கிறார்.

பேரறிவாளன், தூக்குக் கொட்டடியில் ஒவ்வொரு நொடியையும் மரணப் போராட்டத்துடன் கழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தன்னால் ஏற்பட்ட நீதிப்பிழையை நேர்செய்ய உண்மை உரைத்த சி.பி.ஐ. அதிகாரியின் இந்த வாக்குமூலம் மிக மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

TAGS: