இலவசங்களை கொடுத்து எங்களை பிச்சைக்காரர்கள் ஆக்க வேண்டாம் என்று உத்திரபிரதேச மாநில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் அரசு வழங்கிய மானியங்கள், இலவசங்களை கூறி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சோனியா மட்டும் அல்ல, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் காலத்தில் வடமாநிலங்கள் கடுமையான பேரழிவை சந்தித்த நேரத்தில் வாக்காளர்களின் தேவைகளாக இருந்த மின்சாரம், மருத்துவமனை, சாலை வசதி, குறைந்த விலையில் உணவு வழங்குவது உள்ளிட்டவைகளை கூறி ஓட்டுக் கேட்டு வெற்றி பெற்றார்.
அதற்கு பின் வந்த தேர்தலிலும் இதே பாணியை கையாண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. இன்று வரை இதே நிலை தொடர்ந்து வருகிறது.
ஏழை மக்களை கவருவதற்காக 21 பில்லியன் டொலர் செலவிலான மானிய விலை உணவு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை கூறி காங்கிரஸ் தற்போது ஓட்டு சேகரித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரசின் பிரச்சாரம் குறித்து ராய்பெர்லி தொகுதி விவசாயிகள் கூறுகையில், எங்களுக்கு தேவை மானிய விலை உணவு இல்லை, நாங்கள் நன்கொடைகளோ, தொண்டு நிறுவனம் போன்று உதவியோ கேட்கவில்லை.
இலவசங்களை கொடுத்து எங்களை பிச்சைக்காரர்களை போன்று ஆக்காதீர்கள், எங்களுக்கு தேவை மருத்துவர்களை கொண்ட மருத்துவமனைகள், சாலை வசதிகள், மின்சார வசதி, பணவீக்கத்தை சமாளிக்க ஏதாவது வழி, அதற்கு சிறந்த ஒரு தலைவர் தேவை.
எங்கள் பகுதி மக்கள் முதல் முறையாக காங்கிரசிற்கு மாற்றாக மற்றொரு தலைவரான நரேந்திர மோடி பற்றி பேசுகிறார்கள், அவர் குஜராத்தில் ஏற்படுத்தி உள்ள வளர்ச்சி, மக்கள் வளர்ச்சி மற்றும் முதலீடுகள் குறித்து அவர் அளிக்கும் வாக்குறுதிகள் அப்பகுதி மக்களை கவர்ந்துள்ளது.
மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் மக்களின் உண்மையான வேதனைகளும், பிரச்சனைகளும் தெரிய வில்லை என்றும் அவர்களின் கொள்கைகள் ஏழைகளின் நிலையை மாற்ற உதவவில்லை எனவும் கூறியுள்ளனர்.