மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் ஏட்டறிவால் நாட்டைச் சீரழித்து விட்டனர்

narendra_modi_speechதில்லி ஷாதராவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) மாநில பாஜக தலைவர் விஜய் கோயல், அருண் ஜேட்லி, நரேந்திர மோடி, முதல்வர் பதவி வேட்பாளர் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி, நவஜோத் சிங் சித்து.

பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் தங்கள் ஏட்டறிவால் நாட்டைச் சீரழித்து விட்டனர் என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

தில்லியில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மேலும் நான்கு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக மேலிடம் திட்டமிட்டிருந்தது. அதன்படி, ஷாதரா, சுல்தான்புரி, சாந்தினி சௌக் பகுதிகளில் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. அவற்றில் மோடி பேசியதாவது:

பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய நிதியமைச்சர் சிதம்பரமும் “நாங்கள் மோடியிடம் இருந்து பாடம் கற்க வேண்டியதில்லை’ என்று கூறுகின்றனர். ஆனால், அவர்கள் முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ் மற்றும் வாஜ்பாயிடம் இருந்தாவது பாடம் கற்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களால் நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

நரசிம்ம ராவும் வாஜ்பாயும் பொருளாதார மேதைகளாகக் கருதப்படவில்லை. ஆனால், அந்த இரு மாபெரும் தலைவர்களும் நாட்டின் பிரச்னைகளை அறிந்திருந்தனர். நமது பிரதமர் பெரிய பொருளாதார மேதைதான். அது குறித்து நாங்கள் எப்போதும் கேள்வி எழுப்பவில்லை. நிதி அமைச்சர் சிதம்பரமும் நன்கு படித்தவர்தான்.

அதையும் நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ஆனால், அவர்கள் தங்களது நுண்ணறிவு மற்றும் ஏட்டறிவால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாமல், இந்த நாட்டைச் சீரழித்து விட்டனர் என்று மோடி ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

மக்கள் நம்பிக்கையை இழந்த காங்கிரஸ்: தனது பிரசாரத்தில் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது:

நான் பல தேர்தல்களைப் பார்த்துள்ளேன். ஆனால், இந்தத் தேர்தல்தான் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் என்பதைவிட பொதுமக்கள் போராடும் தேர்தலாக அமைந்துள்ளது.

மக்களுக்கு பதில் கூற அரசியல் கட்சிகள் கடமைப்பட்டவை. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் தங்களது பணிகள் குறித்து மக்களுக்குப் பதில் கூறி வருகின்றனர். ஆனால், தில்லி, ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அது போன்று மக்களுக்குப் பதில் அளிக்க விரும்பாமல் ஆணவப் போக்குடன் செயல்படுகின்றனர்.

விலைவாசி உயர்வு குறித்து காங்கிரஸ் அக்கறை கொள்ளவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் ஒருபோதும் பாடுபடவில்லை. பல்வேறு பிரச்னைகளுக்கு மோசமான நிர்வாகம்தான் காரணம்.

காங்கிரஸýக்கு நல்லாட்சியில் நம்பிக்கை இருந்திருந்தால் தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறியிருக்கும். சர்க்கரை நோய், எப்படி மனிதனின் உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறதோ, அதேபோன்றுதான் மோசமான ஆட்சி நாட்டை விழுங்கிக் கொண்டிருப்பதுடன், பொருளாதாரக் கட்டமைப்பையும் வெற்றிடமாக்கிக் கொண்டிருக்கிறது.

மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டது. அதனால்தான் அந்தக் கட்சியின் தலைவர்கள் தில்லிக்கு பிரசாரத்திற்கு வருவதில்லை. மக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை.

பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடந்த 60 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்திருந்தால், அங்குள்ள மக்கள் தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு தில்லிக்கு பிழைப்புக்காக வருவார்களா? அவ்வாறு வரும் மக்களுக்கு ஏதும் செய்வதற்குரிய எண்ணமும் காங்கிரஸ் அரசுக்கு இல்லை என்றார் நரேந்திர மோடி.

பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில், “தில்லியில் தண்ணீர் விநியோகம், பெண்களுக்கான பாதுகாப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக காங்கிரஸ் ஆட்சி மீது மக்களிடம் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

TAGS: