காலங்களை வென்ற தஞ்சை பெரிய கோவில்

thanjai_010ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.

தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும்.

பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது.

வேறெந்த சோழர் கால கோட்டைகளோ, அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை.

எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது.

முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி ராஜகோபுரமன்று. இந்த ஆலயத்தில் கருவறை விமானக்கோபுரமே விண்ணை முட்டுவது போன்று வளாகத்தின் மையப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

மற்றொரு விசேஷம் என்னவெனில் தென்னிந்திய கோபுரங்கள் யாவுமே தட்டையான சரிவுடன் மேல் நோக்கி உயர்ந்திருப்பதே அப்போதைய கோயிற்கலை மரபு.

ஆனால் இக்கோயிலின் கோபுரம் ஒரு எகிப்தியபாணி பிரமிடு போன்று அடுக்கடுக்கான நுண்ணிய தளங்களாக மேனோக்கி சென்று உச்சியில் தட்டையான கடைசி பீடஅடுக்கில் பிரம்மாண்ட குமிழ் மாட கலச அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதோடு முடிவடைகிறது.

ஒரே விதமான ஒத்திசைவான அலங்கார நுட்பங்கள் ஒரு ஆபரண அட்டிகையைப்போன்று கோபுரத்தின் உச்சிவரை நுணுக்கமாக வடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

ஒருவகையில் இந்த அலங்கார நுட்பம் அந்நாளில் தென்னிந்தியாவில் இருந்திராத தன்மையை கொண்டதாய் காட்சியளிக்கிறது. கொஞ்சம் கிழக்குத்தேச கோயில்களின் சாயலும் இந்த கோபுர அலங்கார நுட்பங்களில் தென்படுகிறது.

மற்றொரு முக்கிய அம்சம் வட நாட்டுக்கோயில்களை போன்றே பீட அமைப்பையும் இந்த கோயில் பெற்றுள்ளது என்பதாகும். இதில் மற்ற தமிழ்நாட்டு கோயில்கள் போன்று நாற்றிசை வாசல்கள் மற்றும் தீர்த்தக்குளம் ஆகிய அம்சங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகத்தை அடிப்படை அறமாக கொண்டு முழுக்க முழுக்க ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் நோக்குடன் இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பதை இந்த பிரம்மாண்டத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நம்மால் உணர முடிகிறது.

வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்த கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது இந்த கோயிலின் வடிவமைப்பை பார்க்கும் போதே புலனாகிறது.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

கோயிலின் நிர்வாகம் செம்மையாக நடைபெற விரிவான நடைமுறைகளும் முறைமைகளும் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை கோயில்பகுதியிலேயே இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இளம் வயதில் முடி சூடி பல போர்க்கள வெற்றிகளையும் கண்டு கலாரசனையும் அதீத மேலாண்மைத்திறனும் வாய்க்கப்பட்டிருந்த ராஜராஜ சோழர் நிச்சயம் அந்த கீர்த்திப்பெயருக்கு எல்லாவிதத்திலும் தகவமைந்தவர் என்பதற்கான சான்றுதான் இந்த ‘ராஜராஜுச்சரம் கோயில்.’

இந்த கோயிலில் எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான விமான கோபுரத்தின் உயரம் 190 அடி ஆகும். கோயில் வளாகத்தில் முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த்தேவர் கோயில், சுப்ரமணியர் கோயில் போன்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மறுக்க முடியா வரலாற்று ஆவணங்களாக பல தகவல்களை கொண்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் தொலைநோக்கு பார்வைமொரு முக்கியமான பிரமிக்க வைக்கும் அம்சமாக விளங்குகிறது.

இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நந்தி ஒரே கல்லால் ஆனதாக 14 மீ உயரமும், 7மீ நீளமும், 3மீ அகலமும் அகலமும் கொண்டதாக வீற்றிருக்கிறது. இதன் எடை 25 டன் என்பதாக சொல்லப்படுகிறது. பிருகதீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் உறையும் இந்த திருக்கோயிலில் மே மாதத்தின்போது வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஒரு மஹோன்னத பொற்காலத்தின் சாட்சியமாகவும் கல்லிலே பொறிக்கப்பட்ட ஆவணமாகவும் வீற்றிருக்கும் இந்த தட்சிண மேருவை தமிழர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம்.

இதனை விட்டுச்சென்றார் நம் முன்னோர்களுக்கு, எதனை விட்டுச்செல்வோம் நாம் நாளை? என்ற ஒரு கேள்வியும் காத்திருக்கிறது இக்கோயிலில் நமக்கு.

TAGS: