இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி கூடாது: ஜெயலலிதா

jayalalitha2இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மன்மோகன்சிங்கிற்கு அவர் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்குப் பிறகு, இந்தியாவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான உறவு குறித்து தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் தங்களுக்கு பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளேன்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியும், அவர்களை நீண்ட நாள்கள் சிறையில் அடைத்தும், படகுகள் மற்றும் மீன் வலைகளை பறிமுதல் செய்தும் பல்வேறு தொல்லைகளைத் தருகின்றனர். இதுதொடர்பாக, ஒட்டுமொத்த தமிழக மீனவர்களும் கொதிப்பில் உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் இலங்கையை நட்பு நாடு என்று கூறுவதை நிறுத்த வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி வழங்கப்படுவதை எதிர்த்து தமிழக மக்களின் கோபத்தை தெரிவிக்கும் வகையில் தங்களுக்கு ஏற்கெனவே 4 கடிதங்களையும் எழுதியுள்ளேன்.

இது தொடர்பாக, தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததோடு, தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களும் நிறுத்தப்படும் வரை இலங்கை ராணுவத்தினருக்கு எந்தவிதமான பயிற்சியும் வழங்கக் கூடாது என தெரிவித்திருந்தேன்.

அதேபோல், கடற்படை கப்பல்களையோ, வேறு ஆயுதங்களையோ இலங்கைக்கு வழங்கக் கூடாது என கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி கடிதமும் எழுதியுள்ளேன்.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கி, அவர்களை 4 ஆண்டுகள் பி.டெக். படிப்பில் சேர்க்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்திய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இலங்கைப் படைகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற கொள்கையை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

இலங்கையுடன் இணைந்து செயல்படும் மத்திய அரசின் இந்த கொள்கை, அந்த நாட்டில் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் தீவிரமாகச் செயல்படவும், இலங்கைக் கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்களைத் தாக்கவும் தைரியத்தை வழங்குகிறது.

இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்கிற தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கணிக்கும் மோசமான கொள்கைக்கு எனது எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய பாதுகாப்புத்துறையின் திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

TAGS: