மருந்து, மாத்திரைகளால் ஏழைகளாகும் 4 கோடி இந்தியர்கள்! அதிர்ச்சி தகவல்

tablet_001இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவித்துள்ளன.

உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வைத்துள்ளது.

இதில் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இல்லை என்று கடந்த 2003ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அத்தியாவசிய மருந்துகள் விடயத்தில் விலை கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. அத்தியாவசிய, உயிர் காக்கும் மருந்துகள் எவை எவை? எவற்றை விலை கட்டுப்பாட்டு பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்று அரசு தரம் பிரிக்க வேண்டும் என்று அப்போது கூறியது.

பத்தாண்டுக்கு பின் இப்போது தான் அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது.

விலை கட்டுப்பாட்டு பட்டியலில் எவை கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரிக்கும் போது 18 சதவீத மருந்துகளே விலை கட்டுப்பாட்டில் வருகின்றன என்ற திடுக்கிடும் தகவல் இப்போது தெரியவந்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சை மருந்துகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சிகிச்சை மற்றும் தொற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவை தான் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்றன.

அந்த மருந்துகள் எல்லாம் விலை கட்டுப்பாட்டில் இல்லை. இவை தான் சந்தையில் 80 சதவீதம் உள்ளன. இவை தான் அதிகமாக விற்பனை ஆகின்றன.

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்த 348 வகை மருந்துகளை அப்படியே விலை கட்டுப்பாட்டு பட்டியலில் அரசாங்கம் கொண்டு வந்து விட்டது. அடிப்படை மருந்துகள் மட்டும் தான் இந்த 348 மருந்துகள். உதாரணமாக, பாராசிடமால் 500 மில்லி கிராம் மாத்திரைக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது.

ஆனால், பாராசிடமால் 650 ரக மாத்திரைக்கு கட்டுப்பாடு இல்லை. இதனால் தான் 80 சதவீத முக்கிய மருந்துகள் விலை கண்டபடி அதிகரித்து வருகின்றன என்று மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை செலவு செய்தே ஆண்டுக்கு 4 கோடி பேர் ஏழையாகி வருகின்றனர் என்ற புள்ளிவிவரம் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

இது கனடாவின் மக்கள் தொகையை விட அதிகம். மேலும் இவர்களில் 70 சதவீதம் பேர் மாத்திரை, மருந்துகளை வாங்கியே ஏழையாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: