சியாச்சினை விட்டு இந்தியா வெளியேற வேண்டும்: பாகிஸ்தான்

siachenசியாச்சின் பகுதியில் முகாமிட்டுள்ள இந்தியத் துருப்புகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் புதன்கிழமை கூறியதாவது:

சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளதால் பாகிஸ்தானின் சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் நிலவுகிறது. பாகிஸ்தானின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சியாச்சினிலுள்ள நதிமூலத்தை இந்தியப் படையினர் சேதப்படுத்தி வருகின்றனர். அங்கு தங்கியிருக்கும் இந்திய வீரர்கள் பயன்படுத்தி தூக்கியெறியும் பொருள்களால் சியாச்சின் பனிமலையே அழிந்து போகும் அபாயம் உள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து, இந்தியா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறினார். உலகின் மிகவும் உயரமான மற்றும் குளிர்ச்சியான போர்க்களமான சியாச்சினில், 1984-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் துருப்புகளும், இந்தியத் துருப்புகளும் நிலை கொண்டுள்ளனர். 2003-ஆம் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத்துக்குப் பிறகு இரு தரப்புகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்தப் பகுதியின் குளிர், உயரம் போன்ற இயற்கைக் காரணங்களால் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS: