பாபர் மசூதி இடிப்பு தினம்; சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

Babri_Mosqueநாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் 06.12.2013 வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் புதன்கிழமை முதல் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களை போன்றே தாம்பரம், மாம்பலம், பெரம்பூர், அரக்கோணம் உள்பட புறநகர் மின்சார ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி 3 நாட்களுக்கு ரெயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பயணிகள், வியாபாரிகள் வைத்த கோரிக்கையை அடுத்து, ரெயில்களில் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்படவில்லை.

 இந்த ஆண்டும் ரெயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் பார்சல் பிரிவு, பார்சல் ஏற்றப்படும் ரெயில் பெட்டிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பார்சல்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன. பாபர் மசூதி இடிப்பு தினமான நாளை முக்கிய பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

வியாழக்கிழமை சோதனை செய்யப்படும் பயணிகள் உடமைகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

TAGS: