வளர்ச்சியடைந்த நாடுகளின் யோசனையை ஏற்க இந்தியா மறுப்பு

anand_sharma_001இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், விவசாய மானிய உச்ச வரம்பு குறித்து அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைத்த யோசனையை ஏற்க இந்தியா மறுத்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் விவசாயம் தொடர்பான ஒப்பந்தத்தில், உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் மானியம் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், இந்த உச்ச வரம்பால் தங்களது உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பாலியில் நடைபெற்று வரும் மாநாட்டில் சமரச ஒப்பந்தத் திட்டம் ஒன்றை வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைத்தன.

அதில், விவசாய மானிய உச்ச வரம்பை மீறும் நாடுகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதை நான்கு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை சலுகை அமலில் இருக்க வேண்டும் என்று வளரும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இது குறித்து இந்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று கருத்து வெளியிடுகையில்,

“விவசாய மானிய உச்ச வரம்புப் பிரச்னைக்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைத்துள்ள யோசனையை ஏற்க முடியாது.

அதுபோன்ற மோசமான ஒப்பந்தத்தை ஏற்பதை விட, ஒப்பந்தமே செய்துகொள்ளாமலிருப்பது நல்லது. தேர்தலை மனதில் வைத்துதான் இந்த மாநாட்டில் உணவுப் பாதுகாப்புப் பிரச்னையை இந்திய அரசு எழுப்புவதாகக் கூறுவது தவறு.

ஜனநாயக நாடுகளில் தேர்தல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அதேநேரம் அந்த நாடுகளுக்கென்று கொள்கைகளும், கோட்பாடுகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
2005-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற அமைச்சர்கள் மாநாட்டிலேயே இந்தியா இந்தப் பிரச்னையை எழுப்பியது.

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த 2008-ஆம் ஆண்டில்கூட இந்தியா இந்தப் பிரச்னையை கைவிடவில்லை” என்று கூறினார்.

TAGS: