பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க தயார் நிலையில் ராணுவம்

army_soldiersகாஷ்மீரில் எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவும் முயற்சிகள் நீடிப்பதாகக் கூறியுள்ள ராணுவம், இதனை முறியடிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலை கொண்டுள்ள ராணுவத்தின் 15-ஆவது படைப்பிரிவின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங் கூறுகையில்,

“எல்லைக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்களில், நடமாட்டம் அதிகரித்திருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவர் ஒருவர் சமீபத்தில் அந்தப் பகுதிக்கு வந்திருந்ததாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் மாதங்கள் ராணுவத்துக்கு மிகவும் சோதனை மிகுந்த காலகட்டமாக இருக்கும். இருந்தாலும், ஊடுருவலைத் தடுப்பதற்கு ராணுவம் தயார் நிலையில் இருப்பதால், சமீபத்திய ஊருவல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே, இந்த முயற்சிகளும் முறியடிக்கப்படுவது உறுதி.

கடந்த சில மாதங்களில், காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஏராளமான பயங்கரவாதத் தலைவர்கள் ராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்துக்கு எதிராக துல்லியமான நடவடிக்கைகளை ராணுவம் எடுப்பதற்கு, உளவுத்துறையினர் அளிக்கும் நுணுக்கமான தகவல்கள்தான் காரணம்.

கஷ்மீரில், வரவிருக்கும் தேர்தல்கள் அமைதியாக நடைபெறுவதற்குத் தேவையான சூழலை நிலைநாட்டுவதற்கு ராணுவம் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார். முன்னதாக, எல்லைப் பாதுகாப்புப் படையில் புதிதாகச் சேர்ந்துள்ள 340 வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

34 வாரங்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ள அந்த வீரர்களுக்கு, வழக்கமான பயிற்சிகளுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், அதிரடித் தாக்குதல், போர்க்களங்களில் பதுங்கித் தாக்கி முன்னேறுதல் போன்றவற்றிலும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: