இந்தியாவில் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், இந்தக் காலிப்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் நியமனம் ஆகியவற்றுடன் தரமான கல்வியை வழங்கவும், மாணவிகளையும், சிறுபான்மையின மாணவர்களையும் பள்ளிகளில் அதிக அளவில் சேர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இந்தச் சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.
பிகாரில் கடந்த ஜூலை மாதம் மதிய உணவு சாப்பிட்டு 20 குழந்தைகள் இறந்தது தொடர்பாக ஆய்வுக்குழு சமர்ப்பித்த அறிக்கை பற்றி கேட்டதற்கு, “நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இத்திட்டத்தை மேற்பார்வையிட தேசிய அளவிலான கண்காணிப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.