நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், காங்கிரசுக்கு, பலத்த அடி கிடைத்துள்ளது!

modi rahulபுதுடில்லி : அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படும், நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், காங்கிரசுக்கு, பலத்த அடி கிடைத்துள்ளது.

பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் சூறாவளி பிரசாரத்துக்கு, அமோக வெற்றி கிடைத்துள்ளது.

ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. டில்லியில், 15 ஆண்டாக முதல்வராக இருந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ஷீலா தீட்ஷித்தை, புதிதாக கட்சி துவக்கிய, அரவிந்த் கெஜ்ரிவாலின், ‘துடைப்பம்’ சின்னம் தூக்கி எறிந்துள்ளது.

அடுத்தாண்டு, மே மாதம், லோக்சபா தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்பதற்கு, தற்போதைய ஆளும் கட்சியான, காங்கிரசும், பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வும், தயாராகி வருகின்றன.

சூறாவளி பிரசாரம்:இந்த விஷயத்தில், பா.ஜ., ஒரு படி முன்னேறி, தங்களின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்தது.

அவரும், தன் மாநில நிர்வாக பணிகளுடன், தேர்தல் நடைபெற்ற, டில்லி, ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவர் செல்லும் இடமெல்லாம், வரலாறு காணாத மக்கள் கூட்டம், கூடிய போதே, பா.ஜ.,வின் வெற்றி எழுதப்பட்டதாக, அரசியல் நோக்கர்கள் கருதினர்.

ராஜஸ்தான், டில்லி, மிசோரம் ஆகிய மாநிலங்களில், காங்., ஆட்சியும், சத்தீஸ்கர், ம.பி., ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியும் உள்ளது.

அடுத்த சில மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், அதற்கான, ‘செமி பைனல்’ போட்டியாகவே, அரசியல் கட்சியினரால், கருதப்பட்டது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்,  பா.ஜ.,வுக்கு, சாதகமாக வெளியாகின.  வட கிழக்கு மாநிலமான, மிசோரமை தவிர, மற்ற நான்கு மாநிலங்களிலும், பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன.

இதில், ராஜஸ்தான், ம.பி., ஆகிய மாநிலங்களில், துவக்கத்திலிருந்தே, காங்கிரசை விட, பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, வெற்றி நடை போட்டது.

சாதனை:ம.பி.,யில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாக, ஆட்சியை பிடித்து, ‘ஹாட்ரிக்’ அடித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரசிடமிருந்து, ஆட்சியை பறித்து, பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, வசுந்தரா ராஜே, முதல்வராக பதவியேற்கவுள்ளார். ராஜஸ்தானில் வீசிய, ஆளும் கட்சிக்கு எதிரான அலையால், பா.ஜ., 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று, சாதனை படைத்துள்ளது.

சத்தீஸ்கரில், பா.ஜ., – காங்., ஆகிய கட்சிகளுக்கு இடையே, கடைசி வரை இழுபறி நீடித்தாலும், கடைசி சுற்றுகளில், ஒரு சில தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு, அபாரமான முன்னிலை கிடைத்தது. இதன் காரணமாக, அந்த கட்சி, 49 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக, ஆட்சியை தக்க வைத்துள்ளது. அந்த கட்சியை சேர்ந்த, ரமண் சிங், மூன்றாவது முறையாக முதல்வராகிறார்.

ஆனால், டில்லி சட்டசபை தேர்தல் தான், இந்திய அரசியலில், இதுவரை இல்லாத வகையில், பரபரப்பான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு, துடைப்பத்தை தேர்தல் சின்னமாக முன்வைத்து, பிரசாரம் செய்த, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சிக்கு, ஓட்டுகள் குவிந்தன.

இங்கு, அந்த கட்சிக்கு, 28 தொகுதிகள் கிடைத்தன. பா.ஜ., 32 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனியாக ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்கவில்லை.

15 ஆண்டுகளாக, டில்லியில் ஆட்சி நடத்தி வந்த, காங்கிரஸ், எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. புதுடில்லி தொகுதியில், முதல்வர், ஷீலா தீட்ஷித், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வி அடைந்ததை, காங்., கட்சியினரின் மூத்த தலைவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

காங்கிரஸ் ஆதரவு ஓட்டுகளை பறித்தது கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி. எந்த கட்சிக்கும், பெரும்பான்மை கிடைக்காததால், இங்கு, தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நான்கு மாநில தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள, காங்கிரசுக்கு, பலத்த அடியை கொடுத்துள்ளன. லோக்சபா தேர்தலுக்கானசெமி பைனலாக கருதப்பட்ட இந்த தேர்தலில், காங்கிரஸ், படு தோல்வியை சந்தித்தது, அந்த கட்சியினரிடையே, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், மோடியின் பிரசாரம், நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு, அபார வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளதால், ‘லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி, பிரதமராவது உறுதி’ என, பா.ஜ., வினர், நம்பிக்கையுடன் உள்ளனர். இக்கருத்தை இத்தேர்தல்கள் உறுதி செய்துள்ளன.

பா.ஜ.,வுக்கு ‘சூப்பர் சண்டே’:தேர்தல் முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்ட நான்கு மாநிலங்களிலும், பா.ஜ.,வே, அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. டில்லியில், தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால், அம்மாநில கவர்னர், அந்த கட்சியையே, ஆட்சி அமைக்க, அழைப்பு விடுப்பார்.இதனால், தேர்தல் முடிவுகள் வெளியான, நேற்றைய சண்டே, பா.ஜ.,வுக்கு, ‘சூப்பர் சண்டே’யாக அமைந்தது.

TAGS: