புதுடெல்லி, டிச.9- ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில், டெல்லி மாநில சட்டசபைக்கு போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளது. லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் அன்னா ஹசாரே தீவிர போராட்டம் நடத்தினார்.
அப்போது வருமானவரித்துறை அதிகாரியான அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரேயின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் திட்டத்தை அன்னா ஹசாரே ஏற்கவில்லை.
ஆனால் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு (2012) நவம்பர் மாதம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 4-ந்தேதி அன்று நடந்தது.
அதாவது சரியாக ஒரு வருடம் கழித்து நடந்த தேர்தலில் தீவிர பிரசாரம் செய்து குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. மொத்தம் 70 தொகுதிகளில் 28 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி உள்ளது.
அடுத்த கட்டமாக தேசிய அளவில் தமது கட்சியை பலப்படுத்தப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் என்.டி.ராமராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் அசாம் மாநிலத்தில் பிரபுல்லகுமார் மகந்தாவின் அசாம் கனபரிஷத் கட்சியும் இதே போன்ற சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.