விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறிவிட்டன: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

chidambaram_001விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறி விட்டதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் புதன்கிழமை தேசிய அளவிலான பொருளாதார கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நிதிப் பற்றாக்குறைதான் நாம் விவாதிக்க வேண்டிய பட்டியலில் முதன்மையானதாக உள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 2016-2017 நிதி ஆண்டில் உள்நாட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் 3 சதவீதம் என்ற அளவுக்கு படிப்படியாக கொண்டு வந்து சேர்க்கும் வரையில், நிதி சீர்திருத்த பாதையில் நடைபோடுவது, நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வருவது என்ற நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது.

பணவீக்க அதிகரிப்பால், மத்திய அரசு அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும் என்பது அனைவரும் அறிந்ததுதான். குறிப்பாக பண வீக்கம் நீண்ட காலம் தொடர்ந்து நீடிக்கிறபோது, இது நடக்கும். பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் முன்னுரிமையாக உள்ளது.

இதுதொடர்பான சட்டங்கள் முழுமையாக மாநில அரசுகளின் வசம்தான் உள்ளன. இந்த சட்டங்களின் கீழ் அறிவிக்கை வெளியிடும் அதிகாரம், அதனை அமல்படுத்தும் அதிகாரம் ஆகியவை மாநில அரசுகளிடம்தான் உள்ளன. ஆனால் இந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசுகள் அலட்சியம் காட்டுகின்றன.

மத்திய அரசு தனக்குரிய அதிகாரங்களை கொண்டு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறைன். அதேசமயம் மாநில அரசுகள், இந்த விவகாரத்தில் செயலற்று இருப்பதை சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகும்.

2008ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று சிதம்பரம் கூறினார்.

TAGS: