மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால் கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்

karunanithi_tesoஇலங்கையின் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலுவும், ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி.யும் மக்களவையில் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகத் தொடர்கிறது.

எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைச் சிறைகளில் 88 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அக்டோபர் 6-ஆம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதத்துக்குப் பிறகுதான் சல்மான் குர்ஷித் இலங்கைக்குச் சென்றார். இலங்கை அரசுடன் மீனவர் பிரச்னை தொடர்பாக அவர் பேசியதாகச் சொல்லப்பட்டது.

ஆனால் இன்னும் மீனவர் பிரச்னை மட்டும் தீரவில்லை.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மத்திய – மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கை இன்மையால் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவது தொடர்பாக தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தப் பிரச்னையில் தமிழக அரசு வீண் கால தாமதம் செய்வதற்கான காரணம்தான் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

TAGS: