இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் : மத்திய புள்ளியியல் துறை தகவல்!

Economyபுதுடில்லி : ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான்.

கடந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரத்தை மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படுவது, இந்தியா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த குறைவான வளர்ச்சி மற்றும் அதிகளவிலான பணவீக்கம், மத்திய வங்கியின் கொள்கைகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி விகிதம் வெகுவாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 2 சதவீதத்திற்குள் குறைவான வளர்ச்சியே இருந்துள்ளது.

குறைந்த வருமானம், மக்கள் தொகை நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கிராமப்புறங்களில் பணவீக்க விகிதம் 11.7 சதவீதமாகவும், நகர்புறங்களில் 10.5 சதவீதமாகவும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள தோல்வி காரணமாக சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது, நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாகவே அக்கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளதற்கு காரணம். மத்திய வங்கியின் ஆதரவு மண்டலத்தை விட பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் நாட்டின் வளர்ச்சி குறைந்த அளவில் உள்ளதால், கொள்கை அளவிடுதலை கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சில வர்த்தக பரிமாற்ற முறைகளை கையாண்ட வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்க உயர்வு குடும்பதாரர்களின் பட்ஜெட்டை கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால்,பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் மத்திய அரசு, சந்தை சட்டங்களையும் சீரமைக்க மாநில அரசுகள் தவறியதே பணவீக்க உயர்விற்கு காரணம் என மாநில அரசுகளை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது புதிய பணக் கொள்கையை அடுத்த வாரம் வெளியிட உள்ளது. இதனால் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி வட்டிவிகிதத்தை அதிகரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி, நடப்பு ஆண்டு அக்டோபரில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி சுரங்க உற்பத்தியும் 3.5 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மின்துறை வளர்ச்சி மட்டும் 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

TAGS: