கூடங்குளம் பாதுகாப்பானதே! விஞ்ஞானிகள் பாராட்டு

kudankulamகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பான ஒன்று தான் என 11 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அணுஉலை பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு கன்னியாகுமரியில் கடந்த 11ந் திகதி தொடங்கியது.

இந்த கருத்தரங்கில் பல்கேரியா, சீனா, செக்குடியரசு, பின்லாந்து, ஹங்கேரி, அர்மேனியா, ஈரான், ரஷியா, சுலோவிகா, உக்ரேன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக கலந்து கொண்டன.

பல நாடுகளை சேர்ந்த 14 அணுசக்தி விஞ்ஞானிகள் பங்கேற்று அணு உலை தொடர்பான பாதுகாப்பு குறித்து விவாதித்தனர், 3 நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கு நேற்று நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய தலைவர் பஜாஜ் நிருபர்களிடம் கூறுகையில், புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்திற்கு பின்னால் அணு உலையின் பாதுகாப்பு, தரம், மேம்பாடுகள், நவீன தொழில்நுட்பம், அணுமின் நிலையங்களில் நடந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக கன்னியாகுமரியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு நேரில் சென்று அணுமின் நிலையம் அமைந்திருக்கின்ற பகுதி, கட்டிடத்தின் தரம், அங்கு பணியாற்றும் பணியாளர்களின் நிலை ஆகியவற்றை குழுவாக சென்று நேரில் பார்வையிட்டோம்.

அனைத்து பணிகளும் அங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கண்டறிந்தோம்.

கூடங்குளம் அணு உலை அதிநவீன உபகரணங்களை கொண்ட அணு உலை என்பதால், அந்த குழுவினர் அதை முழுமையாக ஆய்வு செய்து திருப்தி அடைந்து பாராட்டியுள்ளனர்.

கூடங்குளத்தில் தற்போது சோதனை அடிப்படையிலேயே மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த சோதனைகள் நிறைவு பெற்று வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கும்போது எந்தவித தடையுமின்றி மின் உற்பத்தி நடைபெறும்.

அணுமின் நிலைய கட்டுமான பணியில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் சரியானது அல்ல, நாங்கள் முழுமையாக சோதித்த பிறகே அனுமதி வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மராட்டிய மாநிலம் ஜெய்த்தாபூரில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைப்பதற்கான திட்டம் உள்ளதாகவும், அதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

TAGS: