தில்லியில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சனிக்கிழமை சந்தித்து விட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால்.
தில்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது குறித்து தங்களது கட்சி முடிவெடுப்பதற்கு முன்பு காங்கிரஸூம் பாஜகவும் தங்களது 18 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி திடீர் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் தில்லி அரசியல் இழுபறிக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பு சுருங்கியுள்ளதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தில்லி அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். ஆனால், “பெரும்பான்மை பலம் இல்லாததால் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார்’ என அவரிடம் பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ வர்தன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க விரும்பினால் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயார் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜே.பி. அகர்வால் துணைநிலை ஆளுநருக்கு வெள்ளிக்கிழமை இரவு கடிதம் அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க வரும்படி ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை நஜீப் ஜங் அழைத்தார். அதன்படி, அவரை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மணீஷ் சிசோடியா, குமார் விஸ்வாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆதரவை ஏற்க நிபந்தனை:
துணைநிலை ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:
“தில்லியில் ஆட்சி அமைக்க கால அவகாசத்தை ஆம் ஆத்மி கட்சி கோரவில்லை. பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பது உறுதியானால், மீண்டும் வாய்ப்பு கோருங்கள் என துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்கவில்லை. ஆனால், பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வலிய வந்து எங்களுக்கு ஆதரவு தருவது ஏன்?
இரு வேறு துருவங்களான அரசியல் கட்சிகள் எவ்விதக் காரணமுமின்றி ஆம் ஆத்மி ஆட்சி அமைய அளிக்கும் நிபந்தனையற்ற ஆதரவில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கிறோம். பெரும்பான்மை பலம் இல்லாத கட்சிக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்காது; பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், நாங்களும் ஆதரவு கேட்க மாட்டோம்.
இதற்குப் பிறகும் ஆம் ஆத்மி தலைமையில் ஆட்சி அமைய பாஜகவும், காங்கிரஸýம் விரும்பினால், அதற்கு எங்கள் கோரிக்கைகளை இரு கட்சிகளும் ஏற்க வேண்டும். தில்லியில் விஐபி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவது, தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து, மின்சார விநியோக நிறுவனங்களை கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கைக்கு உள்படுத்துவது, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தை கைவிடுவது, குடிநீர்க் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தும் சட்டத்தை ரத்து செய்வது, தில்லியில் வலுவான லோக் ஆயுக்த அமைப்பது உள்ளிட்ட 18 நிபந்தனைகளை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு விதித்துள்ளோம். முந்தைய காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன்.
அக் கோரிக்கைகளை இரு கட்சிகளும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தால், பொது மக்கள் கருத்தைக் கேட்டு ஆட்சி அமைப்பது குறித்து பரிசீலிப்போம்’ என்றார் அரவிந்த் கேஜரிவால்.
துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கைச் சந்தித்தபோது, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு அனுப்பிய 18 நிபந்தனைகள் அடங்கிய கடிதங்களின் நகல்களை அரவிந்த் கேஜரிவால் அளித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் இந்த நிலைப்பாட்டால் தில்லியில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
துணைநிலை ஆளுநர் அறிக்கை
தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியும், புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடிக்கிறது. தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைப்பதில் தயக்கம் காட்ட, அடுத்த இடத்தை வகிக்கும் ஆம் ஆத்மியோ நிபந்தனைகளை விதித்து விறைப்பு காட்டுகிறது.
இந்நிலையில், தில்லியின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் சனிக்கிழமை விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் ஆட்சி அமைக்க அழைத்தும் பாஜக மறுத்திருப்பது மற்றும் ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனைகளை விதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு குறித்து நஜீப் ஜங் எடுத்துரைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அறிக்கையின் நகலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நஜீப் ஜங் அனுப்பியிருப்பதாகவும், இந்தப் பிரச்னையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்த உத்தரவுக்காக அவர் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்ற தில்லியில் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) முடிவடைவது குறிப்பிடத் தக்கது.
சோனியா, ராஜ்நாத் சிங்குக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ள 18 நிபந்தனை விபரம்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள் மற்றும் டெல்லியின் தான் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் எழுப்பியுள்ள 18 பிரச்சனைகள் வருமாறு:
1. டெல்லியில் மிக முக்கிய பிரமுகர்களுக்கான (வி.ஐ.பி.) கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருதல். எம்.எல்.ஏ., மந்திரி அல்லது டெல்லி அதிகாரிகள் கார்களில் சிவப்பு சுழல் விளக்குக்கு தடை. அவர்கள் பெரிய அரசு பங்களாக்களில் வசிக்க தடை. சிறப்பு பாதுகாப்பு கூடாது.
2. ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுதல்.
3. ஒவ்வொரு பகுதியிலும், காலனியிலும் மக்கள் சபைகளில் நேரடியாக முடிவுகளை எடுத்தல்.
4. டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து. டெல்லி பெருநகர் வளர்ச்சி குழுமம், போலீஸ் ஆகியவை மத்திய அரசின் பிடியில் இருந்து விடுபடுதல்.
5. டெல்லியில் உள்ள அனைத்து மின்சார வினியோக கம்பெனிகளிலும் சிறப்பு தணிக்கை. மறுக்கிற கம்பெனிகளின் உரிமங்கள் ரத்து.
6. மின் மீட்டர்களை சோதித்தல்.
7. ஒவ்வொருவருக்கும் தினமும் 220 லிட்டர் குடிநீர்.
8. அதிகாரப்பூர்வமற்ற குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துதல்.
9. குடிசைகளில் வசிப்பவர்களுக்கு குறைவான விலையில் முறையான வீடுகள் கட்டித்தருதல்.
10. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறவர்களுக்கு முறையான வேலை.
11. சாதாரண வியாபாரிக்கும் சாலைகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்.
12. சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு கூடாது
13. டெல்லி விவசாயிகளுக்கு வசதிகள், மானியங்கள்
14. 500 அரசு பள்ளிகள் தொடங்குதல். தனியார் பள்ளிகளுக்கு நன்கொடை நிறுத்தம். கல்வி கட்டணத்தில் ஒளிவுமறைவின்மை.
15. நல்ல வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனைகள்
16. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு படைகள். பாலியல் தொல்லை வழக்குகளில் 3 மாதத்தில் முடிவு.
17. எல்லா வழக்குகளிலும் 6 மாதத்தில் தீர்வு காண கோர்ட்டுகள் அமைத்தல், நீதிபதிகள் நியமித்தல்.
18. இந்த திட்டங்களை நிறைவேற்ற டெல்லி மாநகராட்சிகளின் ஆதரவு.
மேற்கண்ட திட்டங்கள் பற்றி சோனியா காந்தி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தங்கள் கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.