ராஜபாளையம் நாய்கள் சர்வதேச முத்திரை பெறுமா?

rajapalayam_dogதெற்காசியாவிலேயே முதல் முறையாக குறிப்பிட்ட இரண்டு நாய் இனங்கள் குறித்த ஆய்வுகள் இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழகத்திலுள்ள ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்கள் குறித்து சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் இயல்புகள் பட்டியிலப்படவுள்ளன.

இந்த ஆய்வுகளை ஹரியானா மாநிலம் கர்னாலிலுள்ள தேசிய விலங்குகள் மரபின ஆராய்ச்சி மையமும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்கின்றன.

இதற்கு முன்னர் மாடுகள் மற்றும் பல வகை ஆடுகளில் இப்படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நாய் இனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ராஜபாளையம் பயிற்சி மற்றும் கள ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர்.எஸ்.கதிர்வேல்.

ராஜபாளையம் நாய்களிடம் நடத்தப்படும் ஆய்வுகள் எதிர்காலத்தில் வீரிய கலப்பின நாய்களை உருவாக்க வழிவகுக்கும்

இந்தியாவிலுள்ள நாட்டின-நாய்கள் உலகிலுள்ள மற்ற நாயினங்களை விட நோய் எதிர்ப்பு சக்தியையும் வேட்டையாடும் மற்றும் காவல்காக்கும் திறன்களையும் அதிகமாகக் கொண்டவை என்பதால் அவை குறித்த சிறப்பு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

ராஜபாளையம் வகை நாய் இனத்தின் தனித்துவம் மற்றும் சிறப்பியல்புகள் குறித்து வரலாற்றில் பல சான்றுகள் இருப்பதாகவும், கலாச்சார ரீதியிலும் இதற்கு தமிழகத்தில் ஒரு முக்கியத்துவம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரிய கதிர்வேல்.

அதேபோல் வேட்டையாடுவதில் சிப்பிப்பாறை வகை நாய்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பதாலும் இந்த இரு இனங்கள் குறித்த ஆய்வுகள் இப்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மேலும் பல வீரிய கலப்பின நாய்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் டாக்டர் கதிர்வேல் தமிழோசையிடம் கூறினார். -BBC

TAGS: