இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்களையும் அவர்களது உடமைகளையும் உடனடியாக மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தி மீனவர் ஐக்கிய முன்னணி சார்பில் இன்று திங்கட்கிழமை புது தில்லியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மீனவர் ஐக்கிய முன்னணியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் மங்கையர் செல்வன் தலைமையில் மீனவர் பிரதிநிதிக் குழு இன்று இந்திய தலைநகர் புது தில்லியில் முகாமிட்டுள்ளனர்.
முன்னதாக, ஜந்தர் மந்தர் பகுதியில் கூடிய அவர்களுக்கு உள்ளூர் மீனவ அமைப்பினரும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர். இந்த போராட்டத்தின் போது எட்டு அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரினர்.
‘காமன்வெல்த் மாநாட்டுக்குப் பின்னரே இன்னல்கள் அதிகம்’
மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் சேதமடைந்துள்ளதால், அதற்கான இழப்பீட்டை இந்திய அரசாங்கம் மீனவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதும் அந்தக் கோரிக்கைகளில் ஒன்று.
நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து மத்திய அரசு உதாசீனப்படுத்தி வருவதாகவும், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பங்களிப்பு தமக்கு ஏமாற்றத்தையே தந்ததாகவும் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும், காமன்வெல்த் மாநாடு நிறைவுபெற்ற பிறகே இந்திய மீனவர்கள் இன்னும் அதிக அளவில் இன்னலுக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஆகையால் மத்திய அரசு இந்திய மீனவர்களை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையிலும் இந்திய குடிமக்கள் என்ற முறையில் மத்திய அரசிடம் முறையிட வேண்டிய அவசியம் இருப்பதால், தொடர்ந்து அவர்களிடமே முறையிட்டு வருவதாக அவர்கள் கூறினர். -BBC
இதுவெல்லாம் இந்தியாவிற்கு ஒரு பிரச்சினையே அல்ல.தமிழன்தான் இந்தியா காப்பாற்றும் காப்பாற்றும் என்று கனவுகாண்கிரான்.