தில்லியில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டுமா? என்பது குறித்து மக்கள் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க ஆம் ஆத்மி கட்சி தீர்மானித்துள்ளது.
இதையடுத்து, வரும் 22-ஆம் தேதி வரை கடிதங்கள், சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் போன்றவை மூலமாக மக்கள் கருத்தைக் கேட்டறிந்து, வரும் 23-ஆம் தேதி கட்சியின் நிலை அறிவிக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
தில்லியில் ஆட்சி அமைக்க பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் தயக்கம் காட்டி வருவதையடுத்து, தலைநகரில் நீடித்து வரும் அசாதாரண நிலை தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கும் தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் திங்கள்கிழமை அறிக்கை அனுப்பினார்.
இந் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவளிக்கவும், பாஜக பிரச்னை அடிப்படையில் ஒத்துழைப்பு தரவும் முன்வந்தன. இதையடுத்து, மக்கள் நலன் தொடர்புடைய 18 முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண ஒத்துழைப்புத் தருவதாக இருந்தால், ஆட்சி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் கடிதம் அனுப்பினார்.
கேஜரிவால் பேட்டி: இந் நிலையில், தில்லியில் தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கேஜரிவால் கூறியது:
“ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. மக்கள் விரும்பினால் நாங்கள் ஆட்சி அமைப்போம்.
எங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகக் காங்கிரஸ் கட்சி துணை நிலை ஆளுநருக்குக் கடிதம் கொடுத்தது. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் எங்களை ஆட்சி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. ஆனால், நாங்கள் முடிவெடுக்கும் முன்பாக சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று விரும்பி இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் 18 அம்சக் கேள்விகளை அனுப்பினோம். அதற்குக் காங்கிரஸ் மட்டும் பதில் அளித்தது. பாஜக பதில் அளிக்கவில்லை.
காங்கிரஸ் பதிலைப் பொதுமக்களிடம் தெரிவிப்போம். அக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமா? என்பது குறித்து தில்லிவாசிகளிடம் கருத்துக் கேட்கத் திட்டமிட்டுள்ளோம்.
டிசம்பர் 17 முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை மக்களின் கருத்துகளை வரவேற்போம். தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்குத் தொலைபேசி, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, கடிதங்கள் போன்றவற்றின் மூலம் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இதற்காக 25 லட்சம் கடித நகல்களை பொதுமக்களிடம் விநியோகிக்கவுள்ளோம். அவர்களது கருத்துகளைக் கேட்டு ஆராய்ந்த பிறகு வரும் 23-ஆம் தேதி துணை நிலை ஆளுநரைச் சந்தித்து ஆம் ஆத்மி கட்சியின் முடிவைத் தெரிவிப்போம்’ என்றார் அரவிந்த் கேஜரிவால்.
டுவிட்டர் மூலமும் கருத்து கேட்பு
எஸ்.எம்.எஸ். மூலம் கருத்துக் கேட்க 08806110335 என்ற எண்ணை கேஜரிவால் செய்தியாளர்கள் முன்பு அறிவித்தார்.
அவர் அறிவித்த சில நொடிகளில் எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல்கள் வர ஆரம்பித்தன. பேஸ்புக், டுவிட்டர் முலமும் கருத்துகள் வரத் தொடங்கின. அதில் பெரும்பாலானோர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றே கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் “எனது சார்பில் ஆம் ஆத்மி கட்சியே முடிவெடுக்கட்டும். அதை நான் ஏற்கிறேன்’ என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் “காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது “ரிஸ்க்’ ஆன விஷயம்தான். ஆனால், தைரியத்துடன் அதை எதிர்கொண்டு ஆட்சி அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளதாக கேஜரிவால் தெரிவித்தார்.
தமிழனின் உரிமைகளை காக்க தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!