பேரறிவாளன் கருணை மனு மீது மறுபரிசீலனை கோரி குடியரசுத் தலைவருக்கு மனு

perarivalan_002ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் இருவர் குடியரசுத் தலைவர் செயலகத்தில் மனு அளித்துள்ளனர்.

பேரறிவாளனின் வாக்குமூலம் தொடர்பாக அந்த வழக்கை விசாரித்த, சிபிஐ முன்னாள் அதிகாரி தெரிவித்த கருத்தின் முக்கியத்துவம் கருதி மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குரைஞர்கள் என். ராஜராமன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குடியரசுத் தலைவரின் செயலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள பேட்டியில், மத்திய புலனாய்வுத் துறையின் கேரளப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ராஜீவ் கொலையாளிகள் எதற்காக “பேட்டரி’ வாங்கி வரச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது என பேரறிவாளன் என்னிடம் கூறினார்.

ஆனால், வாக்குமூல அறிக்கையில், அவரது ஒப்புதல் தகவல் பதிவு செய்யப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தியைக் கொன்ற வெடிகுண்டுக்கான பாட்டரி செல்களை பேரறிவாளன் வாங்கியதால், கொலைச் சதியில் அவருக்கு பங்கு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆகவே, பேரறிவாளன் தொடர்பான தியாகராஜனின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர், சந்தேகம் எழுந்தால், தயவு செய்து தூக்குத் தண்டனை அளிக்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகவே, பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

TAGS: