தேவயானி மீதான வழக்கை கைவிட இந்தியா வலியுறுத்தல்

devyani

சர்ச்சையில் சிக்கியிருக்கும் இந்திய அதிகாரி தேவ்யானி

அமெரிக்காவில் தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை நிபந்தனை எதுவும் இல்லாமல் உடனடியாக கைவிட இந்தியா வலியுறுத்தியுள்ளது.

நியுயார்க்கில் இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள துணைத் தூதர், தேவயானி கோப்ராகடே கைது செய்யப்பட்ட சர்ச்சை தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, இந்தியாவிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேர மண்டலத்தில் உள்ள வித்தியாசம் காரணமாக ஜான் கெர்ரியின் தொலைபேசி அழைப்பை நேற்று (புதன்கிழமை) தான் ஏற்க முடியாமல் போனதாக தெரிவித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், அமெரிக்காவிடம் கைது நடவடிக்கை குறித்து தெளிவான விவரங்களை கோரியுள்ளதாகவும், தேவயானி மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெறவும், எந்த வித நிபந்தனையும் இல்லாமல் வழக்கை உடனடியாக கைவிடவும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், தேவயானி கோப்ராகடேவை மத்திய அரசு ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

பாஜக, இடதுசாரிகளும் அமெரிக்காவுக்கு கண்டனம்

இந்நிலையில் கைது நடவடிக்கை அமெரிக்க சட்டவிதிப்படி நடைபெற்றதாகவும், கைது செய்யப்படும்போது, இது போன்ற கைதுகளில் பின்பற்றப்படும் வழக்கமான செயல்முறையே பின்பற்றப்பட்டது எனவும் அமெரிக்க அரசின் வழக்கறிஞர் ப்ரீத் பராரா விடுத்துள்ள அறிக்கைக்கு பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவத்துள்ளன.

பின்னர் இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியபோது வழக்கறிஞர் ப்ரீத் பாராரா விடுத்துள்ள அறிக்கையை இந்திய வெளியுறவுத்துறை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே உள்ள உடன்பாடு, ஒப்பந்தங்களை மறந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா உணர வேண்டும் எனவும் அவர் கூறினார். இப்படி ஒரு நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத போதும் தேவையில்லாமல் எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கை இது என குறிப்பிட்டார்.

இந்திய தலைநகர் டில்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகம்இந்திய தலைநகர் டில்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகம்

 

சர்ச்சையில் இருக்கும் நியூயார்க் இந்தியத் துணைத்தூதர் தேவயானி மீது புகார் கொடுத்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ், காணமால் போனது தொடர்பாக இந்தியத் தூதரகம் கொடுத்த பல புகார்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்தியத் தூதரகம் குற்றம் சாட்டியிருக்கிறது.

முன்னதாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இது குறித்து தனது தரப்பு தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

தேவயானி , தனது பணிப்பெண்ணாக வேலை செய்ய இந்தியாவில் இருந்து அழைத்து வந்த சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண் , ஜுன் மாதம் 23ம் தேதியிலிருந்தே காணாமல் போய்விட்டார். இது குறித்து உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அலுவலகத்துக்கும், நியுயார்க் போலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சங்கீதா, அவர் அமெரிக்காவுக்கு செல்ல இந்தியாவில் தரப்பட்ட அதிகாரிகளுக்கான பாஸ்போர்ட்டை சாதாரண பாஸ்போர்ட்டாக மாற்றித்தரவேண்டும் என்றும், தான் அமெரிக்காவில் வேறிடங்களில் வேலைக்குச் செல்ல உதவும் வகையில் தனது விசா அந்தஸ்து மாற்றித்தரப்படவேண்டும் என்றும் கோரினார் . இது அமெரிக்க விதிமுறைகளுக்கு முரணானது. இவர் இது குறித்து இந்திய அதிகாரிகளை மிரட்டுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சங்கீதாவை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப கோரிக்கை

சங்கீதா ரிச்சர்ட்ஸின் பாஸ்போர்ட் ஜூலை 8ம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால், அவரை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி அனுப்ப அமெரிக்கா உதவ வேண்டும்.

தேவயானி கோபர்கடேயின் வீட்டிலிருந்து ரொக்கப் பணம், மொபைல் தொலைபேசி மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதால், அவரைக் கைது செய்ய உதவ வேண்டும் என்று இந்திய தூதரகம் கூறியிருக்கிறது.

இது தவிர, சங்கீதா ரிச்சர்ட்ஸ் தொடர்பாக இந்தியாவில் டில்லி உயர்நீதிமன்றம், கோபர்கடேவுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் இந்தியாவுக்கு வெளியே எடுக்கக்கூடாது என்று செப்டம்பரில் அளித்த உத்தரவை அமல்படுத்தவும் அமெரிக்கா உதவவேண்டும் என்று இந்திய தரப்பில் கோரப்பட்டது என்று இந்தியத் தூதரகம் கூறியிருக்கிறது.

நவம்பர் 19ம் தேதி டில்லி மெட்ரோபாலிட்டன் நீதிபதி, சங்கீதா ரிச்சர்ட்ஸைக் கைது செய்யப் பிறப்பித்த ஜாமின் பெறமுடியாத வாரண்டையும், டிசம்பர் மாதத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு இந்திய அதிகாரிகள் அனுப்பினர் என்று கூறும் இந்தியத் தூதரகம், இந்த கடிதங்கள் எவற்றுக்கும் அமெரிக்கத் தரப்பிடமிருந்து பதில் இல்லை என்றும் கூறியிருக்கிறது. -BBC

TAGS: